வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் மூலம் ஆதரவு
வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆதரவுடன் கடந்த ஆண்டின் செப்டம்பர் முதல் நவம்பர் வரை, 27,000 நிறுவனங்கள் சராசரியாக உள்ளூர்வாசிகள் இருவரை வேலையில் அமர்த்தின.
2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கப்பட்ட உள்ளூர்வாசிகளின் இடைநிலை அளவு ஒன்றாக இருந்தது.
ஒட்டுமொத்தத்தில், வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகமான முதல் மூன்று மாதங்களில், அதாவது 2020 செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்தில் ஏறக்குறைய 130,000 உள்ளூர்வாசிகள் பணியமர்த்தப்பட்டனர்.
'பசிபிக் லாஜிஸ்டிக்ஸ்' எனும் உள்ளூர் நிறுவனத்திற்கு நேற்று வருகை மேற்கொண்டபோது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்த விவரங்களை வெளியிட்டார்.
அவற்றில் 99%, சிறிய, நடுத்தர நிறுவனங்கள். அவற்றில் பத்தில் ஆறு நிறுவனங்கள் ஒன்று முதல் இரண்டு உள்ளூர்வாசிகளையும் எஞ்சிய நான்கு நிறுவனங்கள் அதற்கு மேற்பட்டவர்களையும் வேலையில் அமர்த்தின.
உள்ளூர்வாசிகளைப் பணியில் அமர்த்துவதை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் $1 பில்லியன் மதிப்பிலான வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியுள்ள நிறுவனங்கள் வேலையில் அமர்த்தும் உள்ளூர்வாசி ஒவ்வொருவருக்கும் 12 மாதங்கள் வரை, 25% ஊதிய ஆதரவைப் பெறும்.
அத்திட்டத்தை மேலும் ஏழு மாதங்களுக்கு, அதாவது இவ்வாண்டு செப்டம்பர் வரை நீட்டிப்பதாக அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது. இதற்காகக் கூடுதலாக $5.2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடற்குறைபாடுள்ளோர், முன்னாள் குற்றவாளிகள் ஆகியோருக்கு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த மாதம் 1ஆம் தேதி அத்திட்டம் மேம்படுத்தப்பட்டது. அத்தகையோரை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 18 மாதங்கள் வரை, 50% ஊதிய ஆதரவு கிடைக்கும்.
வேலைக்கு எடுக்கப்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர், அந்நேரத்தில் வேலையில் இருக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தவர்கள் 25 விழுக்காட்டினருக்கும் அதிகம்.
அதுபோல, வேலையில் சேர்ந்தோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் 40 வயதும் அதற்கும் மேலானவர்கள்; மூவரில் ஒருவர் 50 வயதும் அதற்கும் மேற்பட்டவர்கள்.
கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் இருந்து வேலையின்மை விகிதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த அக்டோபரில் 4.8 விழுக்காடாக இருந்த சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கான வேலையின்மை விகிதம், இவ்வாண்டு ஜனவரியில் 4.3 விழுக்காட்டிற்கு இறங்கியது. அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.6 விழுக்காட்டிலிருந்து 3.2 விழுக்காட்டிற்குச் சரிந்தது.
இதனிடையே, பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்ட வேலை தேடுவோரிடத்தில் திறந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் என்று நிறுவனங்களுக்கு அமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.
இதனிடையே, பொருளியல் மீண்டு வருவதையடுத்து சில கொவிட்-19 ஆதரவு நடவடிக்கைகளும் திட்டங்களும் முடிவடைந்து விட்டன; மற்றவை இன்று முதல் மாற்றம் பெறுகின்றன. நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்குமான காப்புறுதி நிவாரணம் முடிவிற்கு வந்துவிட்டது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தவிர மற்றவற்றுக்கு வேலை ஆதரவுத் திட்டம் நீடிக்காது.

