அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்திற்கு அருகே வீதியில் நடந்து சென்ற 65 வயது பிலிப்பீன்ஸ் மாது ஒருவரை ஆடவர் ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாது நடந்து சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த ஆடவர் அவரின் வயிற்றில் உதைத்தார். இதனால் அம்மாது நடைபாதையில் சுருண்டு விழுந்தார். அத்தோடு நில்லாமல், விழுந்து கிடந்த அந்த மாதின் தலையில் அந்த ஆடவர் மும்முறை உதைத்தார்.
அது மட்டுமின்றி, அவரைத் தகாத சொற்களால் அந்த ஆடவர் திட்டியதாகவும் 'நீ இந்நாட்டைச் சேர்ந்தவள் இல்லை' என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
தாக்குதல் தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பட்டப்பகலில் நிகழ்ந்த, பதறவைக்கும் அந்தக் கொடூரத்தை வழிப்போக்கர்கள் கண்டும் காணாமலும் சென்றது வியப்பளிப்பதாக உள்ளது.
அண்மைக்காலமாக, அமெரிக்காவில் வசிக்கும் ஆசியர்களுக்கு எதிராக இனவெறுப்புணர்வு சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எந்நேரமும் தாங்கள் தாக்குதலுக்கு ஆளாகக்கூடுமோ என்ற பீதியுடன் வெளியில் நடமாடுவதாக ஆசிய-அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவத்தை நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ, "அருவருப்பானது, கொடுமையானது," என்று வர்ணித்தார். முக்கியமாக, இத்தகைய தாக்குதல்களைக் காண நேர்ந்தால், உடனடியாகத் தலையிட்டு, தடுத்து நிறுத்துமாறு நியூயார்க் நகர மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தாக்குதல் தொடர்பில் பிராண்டன் எலியட், 38, எனும் ஆடவரைச் சந்தேகத்தின்பேரில் போலிஸ் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

