பிரதமர் லீ: ஆகஸ்ட் மாதத்தில் முடிவு

பிரதமர் லீ: ஆகஸ்ட் மாதத்தில் முடிவு

2 mins read

முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது தொடர்பான விவகாரம்

முஸ்­லிம் தாதி­யர் தங்­க­ளது சீரு­டை­யின் அங்­க­மாக தலை­யங்கி அணிய அனு­ம­திப்­பது தொடர்­பான முடிவு, இவ்­வாண்டு ஆகஸ்ட் இறு­தி­யில் இடம்­பெ­றும் தேசிய தினப் பேரணி உரை­யின்­போது அறி­விக்­கப்­ப­ட­லாம் என பிர­த­மர் லீ சியன் லூங் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பில் டெஸன்­சன் சாலை­யில் உள்ள பொதுச் சேவை மனமகிழ் மன்­றத்­தில் நேற்று மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தி­னர், சம­யத் தலை­வர்­கள் என ஏறக்­கு­றைய 70 பேரு­டன் பிர­த­மர் லீ கலந்­து­ரை­யா­டி­னார்.

அதன்­பின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பிர­த­மர், சமூ­கத்­தி­லும் பணி­யி­டங்­க­ளி­லும் தலை­யங்கி அணி­வது அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் அது­கு­றித்த மனப்­போக்கு மாறி வரு­வ­தா­லும் அத்­த­கைய நட­வ­டிக்­கைக்கு அர­சாங்­கம் தயா­ராக வேண்­டும் என்­றும் அதற்கு அதிக வேலை­க­ளைச் செய்ய வேண்­டி­ இருக்­கிறது என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

"அம்­மாற்­றத்தை மேற்­கொள்ளு­முன், அடித்­தள அள­வில் ஆயத்­த­மாக வேண்­டும். கவ­னத்­து­டன் செய்­யப்­படும் சரிக்­கட்­டல் என்­ப­தை­யும் ஒட்­டு­மொத்த மாற்­ற­மல்ல என்­ப­தை­யும் எல்­லா­ரும் புரிந்­து­கொள்­வதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும். இத்­த­கைய மாற்­றங்­களைச் செய்­யு­முன் வரம்­பு­கள் என்­ன­ என்­பதை மக்­கள் உணர்ந்து­கொள்ளவேண்­டும் என விரும்­பு­கி­றோம்," என்­றார் பிர­த­மர்.

முஸ்­லிம் தாதி­யர் தலை­யங்கி அணிய அனு­ம­திப்­பதை முஸ்­லிம்­களும் முஸ்­லிம் அல்­லா­தோ­ரும் ஏற்­றுக்­கொள்­ளத் தயா­ராய் இருப்­பதை அர­சாங்­கம் உறு­தி­செய்ய வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பில் கடை­சி­யாக 2014ஆம் ஆண்­டில் ஒரு கலந்­து­ரை­யா­ட­லில் தாம் பங்­கேற்­ற­தா­கக் கூறிய அவர், நேற்­றைய கலந்­து­ரை­யா­டல் தெளி­வா­ன­தா­க­வும் உண்­மை­யா­ன­தா­க­வும் இருந்­தது என்­றும் குறிப்­பிட்­டார்.

பல இன, சமய மக்­கள் வாழும் சிங்­கப்­பூ­ரில் நுட்­ப­மான சம­நிலை எட்­டப்­பட வேண்­டி­யுள்­ளது என்­றும் ஆயி­னும் நல்­லி­ணக்­கத்­தைப் பேணு­வ­தி­லும் பொது­வெளி­யைப் பரா­ம­ரிப்­ப­தி­லும் சிங்­கப்­பூர் முழுக் கடப்­பாட்­டு­டன் உள்­ளது என்­றும் திரு லீ கூறி­னார்.

"நல்ல நோக்­கத்­து­டன் முடி­வு­களை எடுக்­கும்­போது தேவை­யில்­லாத விளை­வு­கள் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க விரும்­பு­கி­றோம்," என்­றார் அவர்.

முஸ்­லிம் தாதி­யர் தங்­க­ளது சீரு­டை­யு­டன் தலை­யங்கி அணிந்து ­கொள்­ளும் வகை­யில் மாற்­றம் செய்ய முடி­யும் என்று பிர­த­மர் சொன்­னார்.

"அம்­மாற்­றத்­தைக் கொண்­டு­வர விரும்­பு­கி­றோம். ஆனால், அதற்­குச் சிறிது கால அவ­கா­சம் தேவை. அது குறித்­துச் சமூ­கத் தலை­வர்­க­ளு­டன் ஆலோ­சித்து இருக்­கி­றேன். அடுத்த சில மாதங்­களில் அதற்­கான செயல்­மு­றை­யில் எங்­க­ளுக்கு உத­வு­மாறு அவர்­களைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளேன்," என்­றும் திரு லீ கூறி­னார்.

இவ்­வி­வ­கா­ரம் குறித்­துப் பல ஆண்­டு­க­ளாக விவா­திக்­கப்­பட்டு வந்த நிலை­யில், கடந்த மார்ச் 23ஆம் தேதி சட்ட, உள்­துறை அமைச்­சர், முஸ்­லிம் தலை­வர்­களு­டன் கலந்­து­ரை­யா­டி­னார். அப்­போது, பணி­யின்­போது முஸ்­லிம் தாதி­யர் தலை­யங்கி அணிய அனு­ம­திப்­பது குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­வ­தாக திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, நேற்­றைய கலந்­து­ரை­யா­டல் ஆக்­க­க­ர­மா­க­வும் தெளி­வா­க­வும் இருந்­த­தாக முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி குறிப்­பிட்­டார்.

"இன, சமய உணர்­வு­கள் தொடர்­பு­டை­யது என்­ப­தால் இவ்­வி­வ­கா­ரத்­தைக் கவ­ன­மாக அணு­க­வேண்­டும் எனும் பொது­வான புரி­தல் அர­சாங்­கத்­திற்­கும் சமூ­கத்­திற்­கும் இருக்­கிறது. அத­னால், அவ­ச­ரப்­பட்டு முடி­வெ­டுக்க முடி­யாது," என்­றார் அவர்.