இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் மும்பையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500,000ஐத் தாண்டிவிட்டது. இது ஜப்பான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்ற நாடுகளில் பதிவான ஒட்டுமொத்த பாதிப்பைக் காட்டிலும் அதிகம்.
மும்பையில் ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு 300,000த்தில் இருந்து 400,000த்தைத் தொட 75 நாள்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வெறும் 11 நாள்களில் அந்த எண்ணிக்கை 400,000த்தில் இருந்து 500,000ஆக உயர்ந்துவிட்டது.
இப்போது அங்கு 88,053 பேர் கொரோனா தொற்றுக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 145,384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 794 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 13,205,926ஆகவும் மாண்டோர் எண்ணிக்கை 168,436 ஆகவும் அதிகரித்தது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் 58,993 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் மாண்டுபோயினர்.
ஒட்டுமொத்தத்தில், கடந்த ஐந்து நாள்களில் மட்டும் புதிதாக 616,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தொற்று காரணமாக 3,335 பேர் இறந்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, இப்போது கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. அவர்களில் 530,000 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குறைந்தது 22 மருத்துவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். முன்னதாக, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

