தொடர்ந்து 35வது நாளாக இந்தியாவில் கொவிட்-19 தொற்று சீராக அதிகரிப்பு
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 184,372 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் 1,027 பேர் கிருமித்தொற்றால் இறந்துவிட்டனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 13.9 மில்லியனாகவும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 172,085 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 35வது நாளாக கொரோனா பாதிப்பு சீராக அதிகரித்து வந்துள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 9.84 விழுக்காட்டினர், அதாவது 1,365,704 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், கும்பமேளாவின் மூன்றாவது நாளான நேற்று பல நூறாயிரம் பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடத் திரண்டனர்.
பக்தர்கள் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அரிதாகவே காண முடிவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
கும்பமேளா இடம்பெறும் ஹரித்துவார் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரை கொரோனா பாதித்துவிட்டதாக அரசுத் தரவுகள் கூறுகின்றன.
ஒரே நாளில் 102 பக்தர்களும் கிட்டத்தட்ட 20 சாதுக்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா பரவலின் மையமாகத் திகழும் மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்றிரவு 8 மணியில் இருந்து முதல் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் உரிய காரணமின்றி பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் 'சிபிஎஸ்இ' பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் மிக மோசமாக இருந்து வந்தாலும் பெரிய அளவில் முடக்கநிலை அறிவிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.
உலக வங்கிக் குழுமத் தலைவர் டேவிட் மல்பாசுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு சொன்னார்.
"கொரோனா இரண்டாம் அலை இருந்தாலும் பொருளியலை முற்றிலும் முடக்கும் வகையில் முடக்கநிலையை அரசாங்கம் அறிவிக்காது. உள்ளூர் அளவில் நோயாளிகளை, அவர்களின் குடும்பத்தினரைத் தனிமைப்படுத்துதல் போன்ற வழிகளில் நிலைமை கையாளப் படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கொரோனா தொற்றிவிட்டது. அதைத் தொடர்ந்து தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டுவிட்டர் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.

