தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவை இன்றி சிங்கப்பூர்-ஹாங்காங் இடையே அனைத்து வகை பயணங்களையும் மீண்டும் தொடங்கும் ஏற்பாடு குறித்த விவரங்கள் இறுதிசெய்யப்பட்டு வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைமுறைக்கு வரவிருந்த அந்தப் பயண ஏற்பாடு, ஹாங்காங்கில் கிருமித்தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், "திருத்தியமைக்கப்பட்ட உடன்பாடு தொடர்பிலான விவரங்களை இறுதிசெய்து வருகிறோம். எங்களது திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்போம் என நம்புகிறோம்," என்று போக்குவரத்து அமைச்சு நேற்று ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக, இருதரப்புப் பயண ஏற்பாடு தொடர்பில் இரு நகரங்களிடம் இருந்தும் தொடக்க அறிகுறிகளை எதிர்பார்ப்பதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
சிங்கப்பூர் கட்டாயமாக்கவில்லை என்றபோதும் ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும் திருவாட்டி லாம் சொன்னார்.
"தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஹாங்காங் குடிமக்களுக்குச் சலுகைகள் வழங்க விரும்புகிறோம்," என்றார் அவர்.
சிங்கப்பூர்-ஹாங்காங் இடையிலான மூல உடன்பாட்டின்படி, நேரடி விமானங்களில் ஏறுவதற்குமுன் பயணிகள் தங்களுக்கு 'கொவிட்-19 தொற்று இல்லை' எனப் பரிசோதனையின்மூலம் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்.
முன்னர் கொரோனா தொற்றியோருடன் தொடர்பில்லாமல் ஏற்படும் புதிய பாதிப்புகளின் ஏழுநாள் சராசரி ஐந்தைத் தாண்டினால் இருதரப்புப் பயண ஏற்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என இரு நகரங்களும் முன்னதாக ஒத்துக்கொண்டிருந்தன.
கடந்த ஒரு வாரமாக, ஹாங்காங்கில் உள்ளூர் அளவில் அன்றாட கொரோனா பாதிப்பு இரண்டு அல்லது மூன்று எனப் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக பாதிக்கப்பட்ட 13 பேரில் மூவர் சமூகத்தில் இருப்பவர்கள்.
இதனிடையே, சிங்கப்பூரில் கடந்த இரு வாரங்களாகச் சமூக அளவில் வாரத்திற்கு இரண்டு என புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன.

