ஸ்கூட் மலிவுச் சேவை விமான நிறுவனம், சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான சேவைகளை ஏப்ரல் 16ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடையே தடை செய்துள்ளது. இம்மாதத்தின் முற்பகுதியின்போது அதன் விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேருக்கு கொவிட்-19 இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தத் தற்காலிகத் தடையை ஹாங்காங் அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளது.
டி980 என்ற அந்த விமானம் சிங்கப்பூரிலிருந்து ஏப்ரல் 11ஆம் தேதி ஹாங்காங்கை அடைந்த நேரத்தில், விமானத்திற்குள் கிருமித்தொற்று உள்ள இரண்டு பயணிகள் இருந்ததாக ஹாங்காங்கின் சுகாதார பாதுகாப்பு துறைக்கான நிலையம் தெரிவித்தது. இதன் தொடர்பில் கருத்துரைத்த ஸ்கூட், தனது பயணிகள் உரிய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை உறுதி செய்ய சோதனை முறைகளையும் பணியாளர்களுக்கான பயிற்சிகளையும் தீவிரப்படுத்தப்போவதாகவும் கூறியது.

