மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க ஈஸ்வரன் வலியுறுத்து
தமிழ்மொழிப் புழக்கம் இல்லங்
களிலும் சமூகத்திலும் குறைந்து வரும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண உருவான அமைப்புகளில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு முக்கியமானது என தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறினார். இந்தக் குழு, பிற அமைப்புகளுடன் மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சிகள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததாகவும் அவர் தெரி வித்தார்.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் 15 ஆண்டு பயணத்தைப் பிரதிபலிக்கும் நினைவு
மலரை அச்சு நூலாகவும் மின் நூலாகவும் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று திரு ஈஸ்வரன் பேசினார். இந்நிகழ்வு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நேற்று நடந்தேறியது.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, கல்வி அமைச்சின் நிதியாதரவில் 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது கல்வி அமைச்சின் ஆராய்ச்சியில் தமிழ் புழக்கம் குறைந்துகொண்டு வரும் கவலைக்குரிய போக்கு தென்பட்டதாக திரு ஈஸ்வரன் சுட்டினார்.
அன்றுமுதல் இன்றுவரை மாணவர்களிடையே தமிழ் மொழி மீதான ஆழமான பற்றை உருவாக்கும் பணியிலும் ஆங்கிலத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில் சிங்கப்பூரில் தமிழைத் தொடர்ந்து வாழும் மொழியாக செழிக்கச் செய்யும் முயற்சிகளிலும் தமிழ் மொழி கற்றல் குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
"மனதைக் கவரும் வகையில் பாடங்களை அமைத்தால் நமது மாணவர்கள் உறுதியாக வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழி மீது பற்று வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் சமூகத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தப் பணிகள் எல்லாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. அதற்கு ஒரு முக்கிய உதாரணம் தமிழ் மொழி விழா. அந்த விழாவை முன்னின்று நடத்தும் அமைப்புகளுக்கு தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு உறு துணையாக இருக்கிறது. அண்மையில் கல்வி அமைச்சு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. உயர்தமிழ் கற்கும் வாய்ப்பை தொடக்க நிலை 3, 4 மாணவர்கள் இனி வரும் ஆண்டுகளில் பெறுவார்கள் என்பது அந்த அறிவிப்பு.
"நமது மாணவர்களும் நமது இளையர்களும் இளம் பருவத்திலேயே தமிழ்மொழியைக் கற்பதற்காக உருவாக்கப்படும் வாய்ப்பு
களுள் ஒன்று இது. நம் தமிழ்மொழியை வளர்க்க, கலாசாரத்தை கொண்டாட பல வசதிகள் இங்கு உண்டு. ஆயினும் நமது மாணவர்கள் இதில் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே நாம் இதில் முன்னேற்றம் காணமுடியும். அதன் மூலம்தான் தமிழ்மொழியின் எதிர்காலத்தையும் நமது கலாசாரத்தின் எதிர்காலத்தையும் நம்மால் உறுதி செய்ய முடியும். அந்த வகையில் தமிழ்மொழி விழாவில் மாணவர்
களின் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு புத்தாக்கமிக்க நிகழ்ச்சிகளைப் படைப்பதிலும் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற அவர்களின் முயற்சிகளுக்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும். ஏனெனில் சிங்கப்பூரில் நம் தமிழ்
மொழியின் எதிர்காலம் மாணவர்களின், இளையர்களின் கைகளில்தான் இருக்கிறது. எனவே இது ஒரு கூட்டு முயற்சி. இதில் நம் அனைவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது," என்று விவரித்தார் திரு ஈஸ்வரன்.
குழு கடந்துவந்த 15 ஆண்டு காலப் பயணத்தை ஆவணப்படுத்தியதில் சவால்கள் இருந்ததாகக் குழுவின் ஆலோசகர் சாந்தி செல்லப்பன் கூறினார்.

