ப. பாலசுப்பிரமணியம்
சிங்கப்பூரில் சிலரிடையே இன
வாதப் போக்கு தொடர்ந்து இருந்து வரும்போதிலும் பல இன, பல சமய மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
இந்த நல்லிணக்கமிக்க சமுதாயத்தை உருவாக்க சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த பல ஆண்டுகளாக சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார் அவர்.
"உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனித்தால் அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பல்லின, பல சமய மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழும் மிகச் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என மிக தெளிவாகத் தெரியும். இது விலைமதிப்பில்லாத ஒன்று. இதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த நிலை என்றென்றும் தொடர, அதை மிகப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்," என்றார் திரு வோங்.
சிங்கப்பூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களை சிங்கப்பூரர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்வதை அமைச்சர் சுட்டினார்.
பல இன, சல சமய மக்களுக்கிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்த இது உதவுவதாக அவர் கூறினார்.
இனவாத விவகாரங்களைப் பற்றி இன்னும் வெளிப்படையாக பேசும் சூழல் இருக்க, இணையத்திலும் வெளிச்சூழலிலும் அது குறித்து பேசும் கருத்துகளுக்குத் தனி நபர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் கல்வி அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங்.
இனம் தொடர்பான மெய்நிகர் கலந்துரையாடலில் நேற்று அமைச்சர் பங்கேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியை OnePeople.sg எனும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் தேசிய அமைப்பும் நன்னம்பிக்கை குழுவான 'ரோசஸ் ஆஃப் பீஸ்' அமைப்பும் ஏற்பாடு செய்தன. இக்கலந்துரையாடல் தொடரின் ஆறாம் பாகமான நேற்றைய நிகழ்வு, அடையாளம், இனவாதம், சமூக ஊடக நெறிமுறைகள், வெவ்வேறு தலைமுறைகளின் கண்ணோட்டம் ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நினைவுகூர்ந்தது.
அதோடு, அவை குறித்த சவால்களை சமாளிக்கும் தீர்வுகளும் ஆராயப்பட்டன.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய அமைச்சர் வோங், சிங்கப்பூரின் இன்றைய நல்லிணக்க நிலைப்பாடு பல ஆண்டுகளின் கடின உழைப்பிலும் நட்புணர்வை மேம்படுத்துவதிலும் சாத்தியமானது என்றார்.
இது எதிர்காலத்தில் உருமாறும் ஏனெனில் இன விவகாரங்களின் தொடர்பில் சமுதாயத்தின் போக்கும் காலத்தோடு மாறும் தன்மை கொண்டது என்று அவர் சொன்னார்.
தற்போதைய சூழலில் இளைய தலைமுறையினருக்கும் மூத்த தலைமுறையினருக்கும் இனம் தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் இருக்கும் என்பதை உணர்வது முக்கியம் என்று அமைச்சர் வோங் கூறினார்.
பல இன சமூகத்தை நிலைநாட்டுவதற்கு சிங்கப்பூரில் பல்வேறு அரசாங்கக் கொள்கைகள் நடப்பில் உள்ளன என்று குறிப்பிட்ட அமைச்சர், அவற்றை தொடர்ந்து மறுஆய்வு செய்து மாற்றங்களை அறிமுகம் செய்வதிலும் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்றார்.
இதற்கு உதாரணமாக அவர் சுகாதார துறையில் முஸ்லிம் தாதியர்கள் தலையங்கி அணிய அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதை உதாரணம் காட்டினார்.
அவ்வப்போது இனம் தொடர்பான விவகாரங்கள் எழும்போது, எல்லாத் தரப்பினர்களுக்கும் ஈடுகொடுக்கும் தீர்வுகளை அரசாங்கம் கண்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், தைப்பூசத் திருவிழாவில் மேளதாளத்திற்கு நீக்குபோக்கு மாற்றங்களை அறிமுகம் செய்தது அவற்றில் அடங்கும் என்றார். சமூக ஊடகங்களில் இனவாதம் தொடர்பான சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பி எதிர்
மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றை எதிர்த்துப் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் விளக்கினார்.
இதற்கு இணங்க, பள்ளிகளில் நற்குணமும் குடியியல் கல்வியும் பாடத்திட்டத்தில் இணைய பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வ வகையில் இனம், சமயம் குறித்த விவகாரங்களை கலந்துபேசுவதற்கான தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வோங் தெரிவித்தார். பிறர் கலாசாரத்தை மதித்து செயல்படும் வேளையில் நம் சொந்த கருத்துகளுக்கு வேறுபட்ட பிறரின் மாற்று கருத்துகளையும் செவிமடுக்க வேண்டும் என்று அமைச்சர் சுட்டினார்.
சுகாதார, தொடர்பு, தகவல் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சரான டாக்டர் ஜனில் புதுச்சேரி வழிநடத்திய இக்கலந்துரையாடலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

