2ஆம் கட்ட ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டத்திற்குக் கடன் மூலம் நிதி

2ஆம் கட்ட ஆழ்சுரங்க சாக்கடைத் திட்டத்திற்குக் கடன் மூலம் நிதி

3 mins read

பயன்­ப­டுத்­திய நீரைச் சுத்­தி­க­ரிக்­கும் வச­தி­களை நிலத்­த­டிக்­குக் கொண்­டு­செல்­வ­தன் மூலம் நிலப்­பகு­தியை விடு­விப்­பதை இலக்­காகக் கொண்­டுள்ள முக்­கி­யத் திட்­டம் இடம்­பெற்று வரு­கிறது.

பத்து பில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான இந்த ஆழ்­சு­ரங்க சாக்­கடைத் திட்­டப் பணி­களை 2025ஆம் ஆண்­டிற்­குள் முடிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

மத்­திய, மேற்கு சிங்­கப்­பூ­ருக்­கான இந்த 100 கிலோ­மீட்­டர் நீள நிலத்­தடி 'நீர் நெடுஞ்­சாலை' திட்­டப் பணி­களில் நான்­கில் ஒரு பகுதி நிறை­வ­டைந்­து­விட்­டது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் நாடாளு­மன்­றத்­தில் முன்­மொ­ழி­யப்­பட்ட 'முக்­கிய உள்­கட்­ட­மைப்­பு­களுக்­கான அர­சாங்­கக் கடன் சட்­டம் (சிங்கா)', குறைந்­தது 50 ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கும் உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்கு அர­சாங்­கம் $90 பில்­லி­யன் வெள்­ளி­வரை கடன்­பெற அனு­ம­திக்­கிறது.

"சிங்­கப்­பூர் நீண்­ட­கால நோக்­கில் எவ்­வாறு கட்­ட­மைக்­கிறது என்­ப­தற்கு ஆழ்­சு­ரங்க சாக்­க­டைத் திட்­டம் ஓர் எடுத்­துக்­காட்டு.

"உண்­மை­யில், அந்த அமைப்பு அடுத்த நூறு ஆண்­டு­க­ளுக்கு நிலைத்­தி­ருக்­கும். அடுத்­த­டுத்த தலை­மு­றை­க­ளுக்­காக இந்­தத் தலை­மு­றை­யில் செயல்­தி­றன்­மிக்­க­தா­கக் கட்­ட­மைக்­கி­றோம்," என்று அந்த ஆழ்­சு­ரங்க சாக்­க­டைத் திட்­டத்­தின் 2ஆம் கட்­டப் பணி­களை நேற்­றுப் பார்­வை­யிட்­ட­போது நிதி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா கூறி­னார்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூவும் அவ­ரு­டன் சென்­றி­ருந்­தார்.

பயன்­ப­டுத்­திய நீரைப் பல ஆழ்­சு­ரங்க சாக்­க­டைக் குழாய்­க­ளைக் கொண்டு புவி­யீர்ப்பு விசை­யின்­மூலம் மூன்று மையப்­ப­டுத்­தப்­பட்ட சுத்­தி­க­ரிப்பு ஆலை­க­ளுக்கு அனுப்­பும் கட்­ட­மைப்பே இந்த ஆழ்­சு­ரங்க சாக்­க­டைத் திட்­டம். அந்த மூன்று மையப்­ப­டுத்­தப்­பட்ட ஆலை­க­ளி­லும் பயன்­ப­டுத்­திய நீர் சுத்­தி­க­ரிக்­கப்­பட்டு, 'நியூ­வாட்­டர்' பெறப்­படும்.

சிங்­கப்­பூர் தனது நீர் மீட்­சித்­தன்­மையை மேம்­ப­டுத்­தும் வித­மாக இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே இந்­தத் திட்­டம் கருக்­கொண்­டது. பயன்­ப­டுத்­திய ஒவ்­வொரு துளி நீரை­யும் வீணாக்­கா­மல் சேமித்து, அதை மீண்­டும் பயன்­ப­டுத்த இந்த ஆழ்சுரங்க சாக்கடைத் திட்­டம் வழி­வ­குக்­கும்.

வரும் 2025ஆம் ஆண்­டில் ஆழ்­சு­ரங்க சாக்­க­டைத் திட்­டம் முழு­மை­யா­கத் தயா­ரா­ன­தும், இடை­நிலை நீரேற்று நிலை­யங்­களும் நீர் மீட்பு ஆலை­களும் கட்­டம் கட்­ட­மாக விடை­பெற்று, 214 காற்­பந்­துத் திடல்­கள் அள­விற்கு நிலப்­ப­குதி விடு­விக்­கப்­படும்.

ஆழ்­சு­ரங்க சாக்­க­டைத் திட்­டத்­திற்­கான கட்­டு­மா­னப் பணி­கள் இரு கட்­டங்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரின் வடக்கு, கிழக்­குப் பகு­தி­க­ளுக்­கான, 100 கிலோ­மீட்­டர் நீளத்­திற்­கும் மேல் சுரங்­க­வ­ழி­க­ளை­யும் இணைப்­புக் கழி­வு­நீர்க் குழாய்­களை­யும் கொண்ட முதற்­கட்­டப் பணி­கள் 2008ஆம் ஆண்­டில் முடி­வடைந்­தன. அதற்கு $3.4 பில்­லி­யன் செல­வா­னது.

இரண்­டாம் கட்­டப் பணி­க­ளுக்கு $6.5 பில்­லி­யன் செல­வா­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் கடை­சி­யாக 1970களி­லும் 1980களி­லும் உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்­கா­கக் கடன் வாங்கி இருந்­தது. அப்­போது சாங்கி விமான நிலை­யம், சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது எம்­ஆர்டி தடங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கா­கக் கடன் மூலம் நிதி திரட்­டப்­பட்­டது.

1990களில் பொரு­ளி­யல் துரித வளர்ச்சி கண்­டதை அடுத்து, உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்கு அர­சாங்­கம் தனது வரு­வா­யில் இருந்து நிதி வழங்­கி­யது.

புதிய ரயில் தடங்­கள், கடல்­மட்­டம் உயர்ந்து வரு­வதை அடுத்து கட­லோ­ரப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் என அர­சாங்­கம் இப்­போது வளர்ச்­சித் திட்­டங்­க­ளுக்­காக அதி­கம் செல­விட வேண்டி இருக்­கிறது.

கொவிட்-19 பர­வ­லால் அதி­கரித்­துள்ள, கடு­மை­யான நிதிச் சூழ­லில் இப்­ப­ணி­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கிறது.

சிங்­கப்­பூர் 2020 நிதி­யாண்­டில் வர­வு­செ­ல­வுத் திட்­டப் பற்­றாக்­கு­றை­யாக $64.9 பில்­லி­ய­னை­யும் இந்த நிதி­யாண்­டில் மேலும் $11 பில்­லி­யனை­யும் பதி­வு­செய்­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.