நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள், குறுகியகால வருகை அனுமதி பெற்றவர்கள்
கடந்த 14 நாள்களுக்குள் இந்தியா சென்ற நீண்டகால அனுமதி அட்டைதாரர்களும் குறுகியகால வருகையாளர்களும் சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இன்றிரவு 11.59 மணியில் இருந்து இவ்விதிமுறை நடப்புக்கு வரும்.
சிங்கப்பூருக்குள் நுழைய ஏற்கெனவே அனுமதி பெற்றவர்களுக்கும் இது பொருந்தும் என்று கல்வி அமைச்சரும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.
அத்துடன், அண்மையில் இந்தியா சென்று, நேற்றிரவு 11.59 மணிக்குள் 14 நாள்கள் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றாதவர்கள், பிரத்தியேக வசிப்பிடங்களில் மேலும் ஏழு நாள்கள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
சிங்கப்பூர் வந்திறங்கியதும் இல்லத் தனிமை உத்தரவின் 14வது நாளிலும் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பும் அவர்கள் அனைவரும் 'பிசிஆர்' பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
இந்தியாவில் கொவிட்-19 பரவல் மோசமடைந்துள்ளதால் சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி இருப்பதாக அமைச்சர் வோங் விளக்கமளித்தார்.
நூறு விழுக்காடு தவறு ஏற்பட வாய்ப்பில்லாததாக இல்லத் தனிமை உத்தரவுக் காலத்தைக் கருத முடியாது எனக் கூறிய திரு வோங், புதிதாக வரும் இந்திய ஊழியர்கள் மூலமாக தங்குவிடுதிகளில் புதிய உருமாறிய கிருமி பரவி, புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் கிருமிப் பரவல் அதிகரித்து வருவதாலும் புதிது புதிதாக உருமாறிய கிருமிகள் தோன்றுவதாலும் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புநிலையை சிங்கப்பூர் அதிகப்படுத்தி இருப்பதாக சுகாதார அமைச்சரும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான கான் கிம் யோங் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவிலும் பிரேசிலிலும் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா கிருமிகள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் தொற்றால் பாதிக்கப்பட்ட 342 பேரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரிவின் இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர் என்றும் சமூகத்தில் உருமாறிய கிருமி பரவியதாகக் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
"கண்ணுக்குத் தெரியாத, வலிமைமிக்க எதிரியுடன் நாம் போராடி வருகிறோம்," என்ற அமைச்சர் வோங், மற்ற நாடுகளில் புதிய உருமாறிய கிருமிகள் கண்டறியப்பட்டு வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.
"இப்போதைய தடுப்பூசிச் சுற்று முடிந்த பிறகும், அடுத்தகட்ட தடுப்பூசிச் சுற்றுகளை நாம் தொடர வேண்டியிருக்கலாம். கொரோனாவிற்கு எதிரான போராட்டம் இன்னும் ஓயவில்லை. ஆயினும், ஒன்றிணைந்து பணி ஆற்றுவதன் மூலம் அந்த உயிர்க்கொல்லியை வென்று, நாம் வலுவானவர்களாக மீண்டெழ முடியும்," என்று அவர் சொன்னார்.
நீண்டகால அனுமதி அட்டைதாரர்களுக்கும் குறுகிய கால வருகை அனுமதி பெற்றவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையால் கட்டுமானம், கடல்துறை, செய்முறைத் தொழில்துறை ஆகிய துறைகள்மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
இதனால் கட்டுமான, வீடமைப்புத் திட்டங்கள் மேலும் தாமதமாகலாம் என்றும் புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு எவ்வகையில் கூடுதல் ஆதரவு வழங்கலாம் என அரசாங்கம் ஆராயும் என்றும் அவர் சொன்னார்.

