இந்தியாவில் கொவிட்-19 நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாளும் சாதனை அளவாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாலும் ஆக்சிஜன், படுக்கைகள் போன்ற வசதிகள் இல்லாததாலும் நோயாளிகள் வீட்டிலேயே தங்கி தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டு இருப்பதாக பிபிசி செய்தி கூறுகிறது.
டெல்லியில் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும் மணிக்கு 12 பேர் மரணமடைவதாகவும் பல பூங்காக்களும் தகனச்சாலைகளாக மாற்றப்படுவதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
தலைநகரில் ஏப்ரல் 19 முதல் 24ஆம் தேதி வரை 1,777 பேர் மாண்டுவிட்டதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் மட்டும் திங்கட்கிழமை முதல் நேற்று வரை மொத்தம் 151,000 மக்கள் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352,991க்குக் கூடிவிட்டதாக அதிகாரிகள்
அபாய சங்கு ஊதி இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,812 பேர் மாண்டுவிட்டனர்.
இதுவரை மொத்தம் 17.31 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 195,124 பேர் மரணமடைந்துவிட்டதாக சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 26) தெரிவித்தது.
என்றாலும் மரண எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

