இந்தியாவில் கொவிட்-19 நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாளும் சாதனை அளவாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாலும் ஆக்சிஜன், படுக்கைகள் போன்ற வசதிகள் இல்லாததாலும் நோயாளிகள் வீட்டிலேயே தங்கி தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டு இருப்பதாக பிபிசி செய்தி கூறுகிறது.
டெல்லியில் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும் மணிக்கு 12 பேர் மரணமடைவதாகவும் பல பூங்காக்களும் தகனச்சாலைகளாக மாற்றப்படுவதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
தலைநகரில் ஏப்ரல் 19 முதல் 24ஆம் தேதி வரை 1,777 பேர் மாண்டுவிட்டதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் மட்டும் திங்கட்கிழமை முதல் நேற்று வரை மொத்தம் 151,000 மக்கள் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352,991க்குக் கூடிவிட்டதாக அதிகாரிகள் அபாய சங்கு ஊதி இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,812 பேர் மாண்டுவிட்டனர்.
இதுவரை மொத்தம் 17.31 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 195,124 பேர் மரணமடைந்துவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
என்றாலும் மரண எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
இந்திய பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், புதிய அலை நாட்டை உலுக்கிவிட்டதாகக் கூறி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளும் அவசர மருத்துவ உதவிகளை இந்தியாவுக்கு அனுப்ப உறுதி தெரிவித்து இருக்கின்றன.
தடுப்பூசி மருந்துக்கான மூலப் பொருட்களையும் சாதனங்களையும் பாதுகாப்பு உடைகளையும் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட், கூகல் நிறுவனங்களும் உதவ முன்வந்து இருக்கின்றன. ஜெர்மனி, ஐரோப்பிய ஆணையமும் இவ்வாறே அறிவித்தன.
இந்தியாவில் பல நகர்களிலும் ஊரடங்கு நடப்புக்கு வந்துள்ளது. கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும்படி மக்களை போலிஸ் அதிகாரிகள் நெருக்கி வருகிறார்கள்.
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களும் தடுமாறுவதாக தெரிவிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மிகவும் அவலநிலையை எதிர்நோக்கி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குஜராத் முழுவதும் சிறிய, பெரிய, நடுத்தர மருத்துவமனைகள் எங்கும் பிரச்சினை நிலவுவதாக அகமதாபாத் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மோனா தேசாய் கூறினார்.
நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வசதி இனி இல்லை என்று கூறும் அவரச அறிவிப்புகள் பல நகர்களிலும் செயல்படும் மருத்துவமனைகளில் இடம்பெற்று உள்ளன. இதன் காரணமாக பல நோயாளிகளும் வீட்டிலேயே சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆக்சிஜன் தோம்புகள் இதர மருந்துகள், சாதனங்களைச் கள்ளச்சந்தையில் வாங்க வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டு இருப்ப தால் அதிக விலை காரணமாக அவற்றைப் பெறமுடியாமல் ஏராளமான நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் செய்வதறியாது நிலைக்குத்தி நிற்பதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் உறவினருக்காக ரூ.6,000 மதிப்புள்ள ஆக்சிஜன் தோம்பை ரூ.50,000 கொடுத்து கள்ளச்சந்தையில் வாங்கியதாக புதுடெல்லியைச் சேர்ந்த அன்ஷு பிரியா என்பவர் கூறியதாக பிபிசி தெரிவித்தது.
இவருடைய மாமியாருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் மற்றொரு தோம்பை கள்ளச்சந்தையில் வாங்க வேண்டிய நிலையில் இவர் இருக்கிறார்.
புதுடெல்லி, நொய்டா, லக்னோ, அலகாபாத், இந்தூர் உள்ளிட்ட பல நகர்களிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் குடும்பத்தினர் வீடுகளில் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்து நோயாளிகளை முடிந்தவரை கவனித்துக் கொண்டு வருகிறார்கள்.

