சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் இடையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு விமானப் பயணம் மே 26ல் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நேற்று அறிவித்தார்.
அந்த ஏற்பாட்டின்படி, பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆறு மாதம் தாமதமாக சிங்கப்பூர்-ஹாங்காங் இருதரப்பு பயணம் தொடங்க இருக்கிறது.
இந்தப் பயண ஏற்பாடு எச்சரிக்கையுடன் தொடங்குகிறது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு திசையிலும் ஒரு விமானச் சேவை இடம்பெறும்
முதல் இரண்டு வாரங்களில் ஒவ்வொரு விமானத்திலும் 200 பயணிகள்தான் பயணம் செய்யலாம். இந்த எண்ணிக்கை பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும்.
பயணத்திற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்படும். புறப்படுவதற்கு முந்தைய 14 நாட்களில் பயணி சிங்கப்பூரில் அல்லது ஹாங்காங்கில் இருந்திருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் புறப்படுவதற்கு முன்பாக பயணிகள் தங்கள் கைபேசிகளில் ஹாங் காங்கின் 'LeaveHomeSafe' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து செயல்படும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் அல்லது ஹாங்காங்கில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத சமூகத்தொற்றுகள், ஐந்து என்ற வார சராசரி அளவைத் தாண்டினால் இந்தப் பயண ஏற்பாடு நிறுத்தப்படும். கொவிட்-19 நிலவரம் மேம்பட்ட பிறகுதான் மீண்டும் இது தொடங்கும்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைப் போல புறப்படுவதற்கு முன்பும் தரையிறங்கும் போதும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும். ஹாங்காங்கில் கொவிட்-19 நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த ஒரு மாத காலத்தில் சிங்கப்பூரும் ஹாங்காங்கும் மிகவும் விழிப்புடன் இருந்து வரவேண்டும். இதில் வெற்றி பெற்றால் முதல் விமானத்தை பிரச்சினை எதுவுமின்றி சரளமாகத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்போது முதல் மே 26 சேவை தொடங்கும் நாள் வரை கொவிட்-19 சூழ்நிலையை சிங்கப்பூரும் ஹாங்காங்கும் அணுக்கமாகக் கண்காணித்து வரும் என்று ஹாங்காங்கின் வர்த்தக பொருளியல் மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரமுகரான எட்வர்ட் யாவ் அறிக்கையில் தெரிவித்தார்.
இரு தரப்புகளிலும் கிருமித்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து இருந்து வந்தால் இந்த இருதரப்பு விமானச் சேவை திட்டமிடப்பட்டதைப் போல தொடங்கும் என்று அறிக்கை கூறியது.

