இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பும் உயிரிழப்பும் மிகவும் மோசமடைந்துள்ளது குறித்து எச்சரித்திருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ், அந்நெருக்கடிக்குத் தீர்வுகாண உதவும் வகையில் விரைந்து செயல்பட்டு வருவதாகக் கூறி இருக்கிறார். "இந்தியாவில் நிலைமை 'மனமுடைந்து போவதற்கும் மேலாக' இருக்கிறது," என்று திரு டெட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார். முக்கிய மருத்துவச் சாதனங்கள், மருந்துப்பொருள்கள் விநியோகம் எனத் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் தமது அமைப்பு செய்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள்,
ஆய்வுக் கூடங்களுக்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்டவற்றையும் அனுப்பி வருவதாக அவர் சொன்னார். இந்தியாவிற்கு உதவும் வகையில் 2,600க்கும் மேற்பட்ட தனது பணியாளர்களையும் உலக சுகாதார நிறுவனம் மறுபணியமர்த்தி இருக்கிறது.

