சிங்கப்பூரிலுள்ள பல்வேறு பகுதிகளில் 5,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கையாக கொவிட்-19 சோதனை நடத்தப்பட்டது. வெஸ்ட்லைட் ஊழியர் தங்கும் விடுதியில் கிருமித்தொற்றுக் குழுமம் உருவானதை அடுத்து இந்தச் சோதனை கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை (ஏப்ரல் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை) நடத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு இன்று தெரிவித்தது.
அந்த விடுதியில் எழுவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஐவருக்கு முன்னதாக கிருமித்தொற்று ஏற்பட்டது.
ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒரு முறை ஊழியர் தங்கும் விடுதிகளில் வழக்கமாக செய்யப்படும் சோதனைகளுடன் இந்தச் சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சோதனைகளில் கிருமித்தொற்றுக்கு முன்பு ஆளான ஊழியர்களும் பாதிக்கப்படாத ஊழியர்களும் உட்படுத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
சோதிக்கப்பட்ட 5,500க்கு அதிகமான ஊழியர்களில் முன்னாள் நோயாளிகளும் அடங்குவர்.
மனிதவள அமைச்சின் மறுஉறுதி, பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழுவுடன் கட்டட, கட்டுமான ஆணையமும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் இந்தச் சோதனை நடவடிக்கையை நடத்தியது.
குணமடைந்த ஊழியர்கள் சோதனை செய்யப்பட்டபோது அவர்களின் சிலருக்கு கிருமித்தொற்று இருப்பதாக பிசிஆர் சோதனைகள் காட்டலாம். ஆயினும், இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்பட்டது என்று திண்ணமாகக் கூற முடியாது என்றது அமைச்சு. முன்னதாக இருந்த கிருமித்தொற்றின் கிருமிப்பாகங்கள் உடலிலிருந்து வெளிவர ஏற்படும் தாமதத்தால் முடிவுகள் இப்படி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கிருமித்தொற்று மீண்டும் ஏற்படும் என்பதை மறு உறுதி செய்வதற்கு பல நாள் மருத்துவ சோதனைகள் தேவைப்படலாம் என்றது மனிதவள அமைச்சு.

