இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று இரண்டாவது கட்டத்திற்கு சென்றதை அடுத்து அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பிராணவாயு பற்றாக்குறையால் அந்நாட்டிற்கு உதவி செய்யும் விதமாக சிங்கப்பூர் பிராணவாயு கலன்களைக் கொண்டு செல்லும் இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை, 256 பிராணவாயு கலன்களை இரண்டு சி-130 விமானங்களில் மேற்கு வங்காளத்திற்கு அனுப்புகிறது.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு நாட்டு உறவை இன்று மறுவுறுதி செய்த வெளியுறவுக்கான இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், தொற்றுநோய்க்கு எதிராக போராடும் இந்தியாவுடன் சிங்கப்பூர் ஒருமைப்பாட்டுடன் நிற்பதாகத் தெரிவித்தார்.
இருநாடுகளுக்கும் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையே உள்ள அணுக்கமான உறவால் இது சாத்தியமாகி இருப்பதாக டாக்டர் மாலிக்கி பாயா லேபார் விமான நிலையத்தில் விமானங்களை வழி அனுப்பியபோது கூறினார்.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பி. குமரனிடம் இந்த மனிதாபிமான உதவியை ஒப்படைத்தபோது பிரதமர் அலுவலக அமைச்சரான டாக்டர் மாலிக்கி இவ்வாறு கூறினார்.
அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டம், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள பல அமைப்பு நிலையிலான ஒத்துழைப்பும் பங்காளித்துவமும் அணுக்கமாக இருப்பதைக் காட்டுவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவுக்கு சிங்கப்பூர் அளிக்கும் மனிதாபிமான உதவிகளில் அந்நாட்டுக்கு பிராணவாயு கலன்களை அளிப்பதும் ஒன்றாகும்.
இந்தியாவின் கொவிட்-19 எண்ணிக்கை மூன்று நாட்களுக்கு முன்னர் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று அந்நாடு 352, 991 புதிய கிருமித்தொற்றுகளைக் கண்டுள்ளது. கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள் உள்ள இந்தியாவில் இதுவரை 17.6 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தொற்றியுள்ளது. இவர்களில் 197,000 பேர் அந்நோயால் உயிரிழந்தனர்.

