ஓராண்டுக்கு முன்னர் இருந்ததோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் நிலவரம் படிப்படியாக பிரகாசமாகி வருவதாக
பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். உலக நெருக்கடி, முன்னர் அஞ்சியதைக் காட்டிலும் குறைவான காலத்தில் முடிவுக்கு வரும் நிலை தோன்றுவதாகவும் பிரதமர் தமது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் பொருளியல் மீட்புக்கு வெளிப்புற நிலவரங்கள் ஆதரவு வழங்கி நம்பிக்கையூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கொவிட்-19 சம்பவங்களின் புதிய அலைகளை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் போராடி வரும் நிலையில், அமெரிக்கா வலுவான மீட்சியை இவ்வாண்டு பெற்றுவிடக்கூடிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
"பெரிய அளவிலான உதவித்திட்டங்களும் அமெரிக்க மக்களுக்கான தடுப்பூசி நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதும் இதற்கு முக்கிய காரணங்கள்.
"அதே நேரம் சீனாவும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தி பொருளியலை சிறந்த முறையில் சீரமைத்து வருகிறது," என்று கூறிய திரு லீ, சிங்கப்பூர் நிலவரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவரித்தார்.
"சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, உலகப் பொருளியல் மந்தநிலைக்கு மத்தியில் இவ்வாண்டு 6 விழுக்காட்டை தாண்டக்கூடும்," என்றார் அவர்.
இந்த வளர்ச்சி வர்த்தக தொழில் அமைச்சு இதற்கு முன்னர் வெளியிட்ட 4 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை என்னும் முன்னுரைப்புக்கு மேலானது.
இதுபோன்ற மேம்பட்ட நிலவரத்தால் கொவிட்-19 சிக்கலுக்கு முன்னர் இருந்த நிலைமை மீண்டும் திரும்பும் என்றார் பிரதமர்.
"மின்னிலக்கம், தானியக்கம், நீடித்த நிலைத்தமை போன்றவற்றை எல்லாத் துறைகளிலும் கொள்ளைநோய் வேகப்
படுத்திவிட்டது. அவற்றில் புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளன," என்று கூறிய திரு லீ, முற்றிலும் வேறுபட்ட கொவிட்-19க்குப் பிந்திய உலகை நோக்கி பொருளியலை உருமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
"கொள்ளைநோய் நெருக்கடியிலிருந்து சிங்கப்பூரின் பொருளியலை மீட்க ஏற்
படுத்தப்பட்ட, வலுவுடன் மீண்டெழுவதற்கான பணிக்குழு, இந்த உருமாற்றத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நமது ஊழியரணி மேலும் அதிக பன்மயமாகி வருகிறது.
"தன்னிச்சையாக வேலை செய்வோர், தொழில்முனைவோர், முதிர்ச்சியடைந்த ஊழியர்கள், புதிதாக பட்டக்கல்வி முடித்தோர் என இவர்கள் அனைவருமே வேறுபட்ட வேலைவாய்ப்பு சவால்களை எதிர்நோக்குகின்றனர். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஏற்ற கொள்கைகளும் தீர்வுகளும் தேவைப்படுகின்றன," என்று பிரதமர் குறிப்பிட்டார். தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அதன் 60வது ஆண்டு நிறைவையொட்டி இவ்வாண்டு 600க்கும் மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்களை ஏற்படுத்தி உள்ளது.
புதிய வேலைகளை உருவாக்கவும் திறன்கள் தேவைப்படும் இடங்களைக் கண்டறியவும் நிறுவனங்களோடு இணைந்து இக்குழுக்கள் பணியாற்றும்.
கொவிட்-19 நெருக்கடி காலத்தில் தொழிலாளர் இயக்கம் தனது ஒத்துழைப்பை வழங்கியது குறித்து பிரதமர் கருத்துரைத்தார். நாளைய சிறந்த எதிர்காலத்திற்காக இன்றைய உழியர்கள் அர்ப்
பணிப்பை வழங்க அது உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

