மலேசியாவில் நாளை மறுதினம் (மே 12) முதல் ஜூன் 7 வரை நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் இன்று (மே 10) அறிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த தேசிய பாதுகாப்பு மன்றம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மலேசியாவில் நோய்ப் பரவல் சூழல் தொடங்கியதிலிருந்து மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆகக் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இது எனக் கூறப்படுகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் காலத்தில் பொருளியல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் என்றார் பிரதமர் முகைதீன். எனினும், சமூக நடவடிக்கைகள், உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல், மாவட்டங்கள் மாற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அனைத்தும் தடை செய்யப்படும் என்றார் அவர்.
முடக்கநிலை நடப்பில் இருக்கும் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்புற உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக பிரதமர் முகைதீன் கூறினார்.
மலேசியாவில் வரும் வியாழக்கிழமை (மே 13) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள வேளையில், நாடு தழுவிய முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


