கோ பூன் வான்: புதிய எஸ்பிஎச் மீடியா பயிலகம் ஏற்படுத்தப்படும்
மாறிவரும் வாசகர்களை அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்தும் திறனைக் கொண்டிருக்கும் விதமாக சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) மீடியா நிறுவனத்தின் செய்திப்பிரிவுகளுக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் ஊடகச் செயல்பாடுகள் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, எஸ்பிஎச் மீடியா பயிலகம் உருவாக்கப்படும் என்று எஸ்பிஎச் மீடியா அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள திரு கோ குறிப்பிட்டார்.
புதிய ஊழியர்களுக்கு முறையான பயிற்சியை அளிக்கவும் இப்போதைய பணியாளர்கள் புதிய தேர்ச்சிகளைப் பெறவும் அந்நிறுவனம் உதவும்.
எஸ்பிஎச் கலையரங்கில் இருந்தபடி அந்நிறுவன ஊழியர்களிடம் திரு கோ ஆற்றிய உரை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது, 2022 முதல் அதிகளவில் எஸ்பிஎச் உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த திரு கோ, அது பத்திரிகைத் துறையில் மட்டுமின்றி, மின்னிலக்கத் துறைகளிலும் வழங்கப்படும் என்றும் சொன்னார்.
இப்போதைய செய்தியாளர்கள் உலகளாவிய கட்டமைப்பு வாய்ப்புகளையும் வெளிநாட்டுப் பத்திரிகைகளுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையிலும் உலகத் தரம் வாய்ந்த செய்திப்பிரிவுகளில் ஆய்வு உதவித் தொகை, இணைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்று திரு கோ தெரிவித்தார்.
உள்ளூர்ப் பட்டதாரிகள், பத்திரிகை, மின்னிலக்க ஊடகத் துறைகளில் வாழ்க்கைத்தொழில் அனுபவத்தைப் பெறும் வகையில் வேலைப்பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
"திறமைமிக்க, குறிக்கோள் கொண்ட இளையர்களுக்குச் சிறப்பான வாழ்க்கைத்தொழிலாக விளங்கும் வகையில் ஈர்ப்புமிக்க துறையாக பத்திரிகைத் தொழிலை வைத்திருப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்றார் திரு கோ.
உருமாற்றத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய முதல் தரமான மின்னிலக்கத் தொழில்நுட்பக் குழுவை உருவாக்குவது போன்ற வழிகளில் செய்திப்பிரிவுகளின் மின்னிலக்க ஊடகச் செயல்திறன் விரிவுபடுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அன்றாட செய்தி வாசிப்பு அனுபவத்தை இன்னும் எளிதாகவும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் இருக்குமாறு செய்ய, வரைகலை, காணொளி, தொழில்நுட்பம், வடிவமைப்பு, தரவு போன்ற பல்வேறு தேர்ச்சிகளையும் கருவிகளையும் அவர்கள் கொண்டிருப்பர்.
அதற்குச் செய்தியாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள், இணைய ஊடக நிபுணர்கள் ஆகியோரின் கூட்டுமுயற்சி தேவை என்றும் இந்த முயற்சிக்குத் தேவையான கூடுதல் முதலீடுகளுக்கு எஸ்பிஎச் மீடியா திட்டமிட்டு வருகிறது என்றும் திரு கோ தெரிவித்தார்.
மின்னிலக்கத் தயாரிப்புகளுடன் கூடிய அச்சு ஊடக நிறுவனம் என்றில்லாமல் அச்சுப் பொருள்களுடன் கூடிய மின்னிலக்க ஊடக நிறுவனம் எனும் வகையில் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தை உருமாற்றும் திட்டத்தை முடுக்கிவிட வேண்டும் என்றும் அதற்கு மனப்போக்கில் மாற்றம் தேவைப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
"தரமான செய்திகள் இன்னும் முக்கியம். என்றாலும் அது மட்டும் போதாது," என்றார் திரு கோ. சந்தாதாரர்களையும் சந்தாதாரர்கள் அல்லாதோரையும் சென்றடையும் வகையில் புதிய எஸ்பிஎச் மீடியா நிறுவனம் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களையும் தளங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதில் வெற்றிபெற, சந்தாதாரர்கள், சந்தாதாரர்கள் அல்லாதோரின் மின்னிலக்கப் பழக்கவழக்கங்களைக் கேட்டறிந்து, புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப செய்திகளை வழங்கி, அவர்களை அர்த்தமுள்ள வகையில் இணைக்க வேண்டும் என்றும் திரு கோ சொன்னார்.
"அதற்குச் செயல்திறன்கள், தேர்ச்சித் தொகுப்புகள், மனப்பாங்கு ஆகியவற்றில் ஒரு பெரும் பாய்ச்சல் தேவை," என்றார் அவர்.
சிறிய குழுக்களாக எஸ்பிஎச் பணியாளர்களைச் சந்திக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர்களின் அக்கறைகளையும் நாட்டங்களையும் கேட்டறிந்து வருவதாகவும் திரு கோ குறிப்பிட்டார்.
"செய்திப்பிரிவுகள் எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை என்பதும் அவை சவால்களை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளன என்பதும் இதுவரையிலான எனது தனிப்பட்ட எண்ணம். தேசிய பணியில் ஊடகங்களின் பங்கு குறித்து அவை கவனமாக இருக்கின்றன. அதில் அவை தோற்கக்கூடாது," என்றார் திரு கோ.
இந்த உருமாற்றம் வெறும் ஒரு தொழில்நுட்ப நடவடிக்கை அல்ல என்றும் கலாசார மாற்றத்தை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்ட அவர், அதற்குக் கால அவகாசமும் முயற்சிகளும் தேவை என்றும் கூறினார்.