சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி மேலும் 24 பேருக்கு சமூக அளவில் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான சமூக அளவிலான பாதிப்பு.
சமூக அளவில் பாதிக்கப்பட்ட 24 பேரில் 17 பேர் சாங்கி விமான நிலைய கொவிட்-19 குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதன்மூலம் அக்குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ஏனைய ஆறு பேர் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள்.
இந்த 24 பேரில் 14 பேர் முன்னதாகவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். சிங்கப்பூரில் நேற்று மொத்தம் 32 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,451ஆக அதிகரித்துள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 12 குழுமங்கள் இங்கு உள்ளன. வெளிநாடுகளிலிருந்து வந்த எட்டு பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்கள் தங்கு விடுதிகளில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.
இதற்கிடையே, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் என உறுதி செய்யப்பட்ட இங் டெங் ஃபோங் மருத்துவமனை ஊழியரிடம் தற்போது தென்படும் அறிகுறிகள் மதிப்பீடு செய்யப்பட்டதில் அவை சளியை ஏற்படுத்தும் 'ரைனோவைரஸ்' எனும் கிருமியால் ஏற்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறை தொழில்நுட்ப
ராகப் பணியாற்றும் அந்த ஆடவருக்கு முன்பே கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவரிடமிருந்து கிருமி பரவும் அபாயம் இல்லை என்று நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது குடும்பத்தினருக்கும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
"எங்கள் ஊழியர் குணமடைந்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்," என்று இங் டெங் ஃபோங்
மருத்துவமனை அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. நேற்று முன்
தினம் 16 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. ஏனைய ஆறு பேர் வெளிநாடு
களிலிருந்து வந்தவர்கள்.
சமூக அளவில் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஏழு பேர் சாங்கி விமான நிலைய கொவிட்-19 குழுமத்துடன் தொடர்புடையவர்கள். அவர்களில் மூவருக்கு பி1617 வகை கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முனையம் 3ல் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகளாகப் பணியாற்றும் 39 வயது ஆடவர், 38 வயது பெண் ஆகியோருடன் முனையம் 3ல் பணியாற்றும் 65 வயது துப்புரவுப் பணியாளரும் அவர்களில் அடங்குவர். பாதிக்கப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேர் இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 3ஆம் தேதியிலிருந்து சாங்கி விமான நிலையம் முனையம் 3க்குச் சென்றவர்களுக்கு இலவசமாக கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
"கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள எவ்வாறு முன்பதிவு செய்வது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்
களுக்குப் படிப்படியாக குறுந்
தகவல் மூலம் தகவல் அனுப்பப்படும்," என்று சுகாதார அமைச்சு கூறியது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லை.
அவர் செங்காங் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறை தாதியாகப் பணிபுரியும் 33 வயது ஆடவர்.
அவருக்கு பி1617 வகை கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது கடந்த வாரத்தில் சமூக அளவிலான பாதிப்பு 62லிருந்து 49ஆக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஒரு வாரத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்புஇல்லாதவர்கள் பாதிப்படைந்திருப்பது அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

