இருவருக்குமேல் ஒன்றுகூட அனுமதியில்லை

இருவருக்குமேல் ஒன்றுகூட அனுமதியில்லை

2 mins read

நாளையில் இருந்து கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன; உணவங்காடிகளில் அமர்ந்து உண்ண முடியாது

சமூ­கத்­தில் கொவிட்-19 தொற்று பர­வு­வது சற்று கூடியுள்ளதையடுத்து, அதைத் தடுக்­கும்­வி­த­மா­கக் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்ளன.

சமூக ஒன்­று­கூ­டல்­களில் இரு­வ­ருக்கு­மேல் இடம்­பெற அனு­ம­தி­யில்லை. உண­வ­கங்­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் அமர்ந்து உண்ண அனு­மதி இல்லை. வீடு­களில் ஒரு நாளைக்கு அதி­க­பட்­சம் இரு வேறு வரு­கை­யா­ளர்­களை மட்­டுமே வர­வேற்க முடி­யும். அதே­போல், தனி­ந­பர்­கள் நாளொன்­றுக்கு இரு சமூக ஒன்­று­கூ­டல்­களுக்குமேல் பங்கேற்கக்கூடாது.

இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் நாளை முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி­வரை நடை­மு­றை­யில் இருக்­கும்.

பணி­யி­டங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், வீட்டிலிருந்து வேலை செய்­யும் நடைமுறை தொட­ர­வேண்­டும். வீட்­டிலிருந்து வேலை செய்­ய முடியும் பணி­யா­ளர்­கள், அவ்­வாறே வேலை­யைத் தொடர்­வதை நிறு­வ­னங்­கள் உறு­தி­செய்ய வேண்­டும்.

கடந்த சில வாரங்­களில் பொது­மக்­களில் பல­ரும் சாங்கி விமான நிலை­யத்­திற்­குச் சென்­றி­ருக்­க­லாம் என்­ப­தா­லும் அவர்­களில் சிலர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­ப­தா­லும் கடும் நட­வ­டிக்­கை­கள் தேவைப்­ப­டு­கின்­றன என்று நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது கல்வி அமைச்­சரும் கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு லாரன்ஸ் வோங் கூறி­னார்.

சமூ­கத்­தில் கொரோனா தொற்று பாதிப்பு தெரி­யா­மல் மறைந்­தி­ருக்­க­லாம் எனும் கவலை எழுந்­துள்­ள­தாக திரு வோங் குறிப்­பிட்­டார். முன்­னர் பாதிக்­கப்­பட்ட எவ­ரு­ட­னும் தொடர்­பில் இல்­லா­த­போ­தும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தை­யும் அவர் சுட்­டி­க்காட்டினார்.

சிங்­கப்­பூ­ரில் இப்­போ­துள்ள 11 கிரு­மித் தொற்­றுக் குழு­மங்­களில் ஒன்­றான சாங்கி விமான நிலைய கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 59ஆக உயர்ந்­துள்­ளது.

குடும்­பங்­க­ளின் இப்­போ­தைய குழந்­தைப் பரா­ம­ரிப்பு ஏற்­பா­டு­க­ளைத் தொட­ர­லாம் என்­றும் பேரக் குழந்­தை­களை அன்­றா­டம் தாத்தா-பாட்­டி­மார் பார்த்­துக்­கொள்­வது இரு வரு­கை­யா­ளர் வரம்­புக்­குள் வராது என்­றும் சுகா­தார அமைச்சு தெளிவு­ப­டுத்­தி­யது.

இருப்­பி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வும் வெவ்­வேறு வீடு­களைச் சேர்ந்த பேரப்­பிள்­ளை­க­ளு­டன் ஒன்­று­க­லப்­ப­தைக் குறைத்­துக்­கொள்­ள­வும் தாத்தா-பாட்­டி­மார் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

இந்­நி­லை­யில், அத்­தி­யா­வ­சி­யப் பணி­கள் தவிர்த்து, தேவை­யின்றி வெளி­யில் செல்­வ­தைக் குறைத்­துக்­கொண்டு வீட்­டி­லேயே இருக்­கு­மா­றும் அர­சின் ஆலோ­சனை­க­ளைப் பின்­பற்­று­மா­றும் பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யா­கப் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார். வெளி­யில் செல்­லும்­போது முகக்­க­வ­சம் அணி­வது, டிரேஸ்­டுகெ­தர் பயன்­ப­டுத்­து­வது போன்ற பாது­காப்பு இடை­வெளி நட­வ­டிக்­கை­க­ளைக் கடைப்­பி­டிக்­கு­மா­றும் பிரதமர் அறி­வு­றுத்தி இருக்­கி­றார்.

மே 16 முதல் ஜூன் 13 வரை...

♦ உணவு நிலையங்களில் அமர்ந்து உண்ண முடியாது; வாங்கிச் செல்ல, விநியோகிக்க மட்டும் அனுமதி.

♦ சமூக ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் இருவர் மட்டுமே இடம்பெறலாம்.

♦ வீடுகளில் நாளொன்றுக்கு இரு வேறு வருகையாளர்களை மட்டும் வரவேற்கலாம்.

♦ வழிபாட்டுத் தலங்கள், திரை அரங்குகள், நேரடி நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சிக்குமுன் கொரோனா பரிசோதனையுடன் அதிகபட்சம் 100 பேரையும் பரிசோதனையின்றி 50 பேரையும் அனுமதிக்கலாம்.

♦ திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை.

♦ ஈமச்சடங்குகளில் 20 பேர்வரை பங்கேற்கலாம்.