இந்தியாவின் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த நான்கு நாள்களில் 75 பேர் மரணமடைந்தனர்.
அம்மாநிலத்தின் ஆகப் பெரிய கொரோனா மருத்துவமனை இதுதான். கடந்த செவ்வாய்க்கிழமை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அங்கு 26 பேர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து, அம்மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் மரணம் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு வலியுறுத்தி இருந்தது.
ஆயினும், அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிப்பது தொடர்கிறது. இதன் காரணமாக, கடந்த புதன்கிழமை 21 பேரும் வியாழனன்று 15 பேரும் நேற்றுக் காலை 13 பேரும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில் காணப்படும் தளவாடப் பிரச்சினைகளே இதற்குக் காரணம் என்று நீதிமன்றத்தில் கோவா அரசு தெரிவித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், தளவாடப் பிரச்சினைகள் காரணமாக கொரோனா நோயாளிகள் இறப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அதன் தொடர்பில் நேற்றிரவு 7 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
3வது நாளாக 4,000 மரணங்கள்
இதனிடையே, தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில் 4,000 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன. அதே வேளையில், முந்திய நாளைக் காட்டிலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 19,000 குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 343,144 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்; 4,000 பேர் மாண்டுவிட்டனர்.
இந்தியாவில் ரஷ்யத் தடுப்பூசி
கொவிஷீல்டு, கொவேக்சின் என இரு தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் V' தடுப்பூசி அடுத்த வாரத்திலிருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக, முதலாவது ஸ்புட்னிக் தடுப்பூசி ஹைதராபாத்தில் நேற்று போடப்பட்டது. இருமுறை அத்தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற நிலையில், ஒருமுறை தடுப்பூசிக்கான விலை ரூ.995 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

