தொற்று அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகள்
கொவிட்-19 தொற்று அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து சாங்கி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், குறைந்த அபாயமுள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து பிரித்து வைக்கப்படுவர்.
குறைந்த அபாயமுள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் பயன்படுத்தும் வழிகளின்றி, அதிக அபாயமுள்ள பகுதிகளில் இருந்து வருவோர்க்கென வேறு வழிகள் ஒதுக்கப்படும்.
அதேபோல, வருகை குடிநுழைவுக் கூடங்கள், பயணப்பை சுழல்பட்டைகள், கழிவறைகள் ஆகியனவும் அவர்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்படும்.
கொரோனா தொற்று அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வருவோர், விமான நிலையத்தில் இருக்கும் எல்லா நேரங்களிலும் பாதுகாப்புடன் வழிநடத்திச் செல்லப்படுவர்.
அத்துடன், விமான நிலையத்தில் வந்திறங்கியதும் செய்துகொள்ள வேண்டிய கொரோனா பரிசோதனையை அவர்கள் பிரத்தியேக உடல்நலப் பரிசோதனை மையங்களில் செய்துகொள்ள வேண்டும்.
சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பெரும்பாலும், தெற்காசியா உட்பட தொற்று அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை வரவேற்கும் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
8,000 ஊழியர்களுக்குப் பரிசோதனை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் சிறப்புப் பரிசோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாங்கி விமான நிலைய பயணிகள் முனையக் கட்டடங்களில் பணிபுரியும் கிட்டத்தட்ட 8,000 ஊழியர்கள் அடுத்த சில நாள்களுக்குள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
நேற்று முன்தின நிலவரப்படி, 59 பேருடன் இப்போது சிங்கப்பூரின் ஆகப் பெரிய கிருமித்தொற்றுக் குழுமமாக சாங்கி விமான நிலையம் விளங்குகிறது.
இம்மாதம் 9ஆம் தேதியில் இருந்து விமான நிலைய ஊழியர்கள் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர்களில் 35 பேருக்குத் தொற்று உறுதியானதாகவும் சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
ஆயினும், அவர்களில் எவருக்கும் உடல்நிலை மோசமான நிலையில் இல்லை.
இதையடுத்து, தடுப்பூசி போட்டிருந்தாலும் போட்டிருக்காவிடினும் தொற்று பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ள பொறுப்புகளை ஏற்றுள்ள விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் ஏழு நாள்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் அட்டவணை போடப்பட இருக்கிறது.
இப்போது, அந்தக் காலமுறை பரிசோதனை 14 நாள்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் பலரும் மூன்றாம் முனையத்தின் கீழ்த்தளம் 2ல் உள்ள ஓர் உணவகத்தில் உண்டதாகவும் தூய்மை, கிருமிநாசினி தெளிப்பு பணிகளுக்காக அந்த உணவகம் இம்மாதம் 10ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டு இருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
ஜுவல் சாங்கியில் இப்போது தூய்மை, கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் விமான நிலைய ஊழியர்கள் பாதிக்கப்பட்ட இடங்களாகச் சந்தேகிக்கப்படும் இடங்களுக்கும் அந்நடவடிக்கைகள் நீட்டிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்குள்ள கோப்பித்தியாம் நிலையத்திலும் ஃபேர்பிரைஸ் பேரங்காடியிலும் தூய்மை, கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
பரிசோதனை குறித்து குறுஞ்செய்தி
இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து சாங்கி விமான நிலையம் மூன்றாம் முனையத்திற்குச் சென்று வந்த பொதுமக்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம். அவர்கள் அனைவரும் அப்பரிசோதனையைச் செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பரிசோதனைக்கு முன்பதிவு செய்துகொள்வது எப்படி என்பது குறித்துப் படிப்படியாக ஆணையம் அவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பும்.
"கிருமித்தொற்றுக்கெதிராகத் தொடரும் போரில், அக்கிருமியைப் பரவவிடாமல் கட்டுப்படுத்துவதற்கு உதவ தங்களது பங்கை ஆற்றுமாறு விமான நிலையச் சமூகத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம். சமூகப் பொறுப்பைக் கடைப்பிடிக்குமாறும் சமூகக் கலந்துறவாடல்களைக் குறைத்துக்கொள்ளுமாறும் விமான நிலைய ஊழியர்கள் நினைவூட்டப்பட்டு வருகின்றனர்.
"தங்களையும் தங்களின் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் பரிசோதனை செய்துகொள்ளவும் அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்," என்று பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
உலகத்துடன் சிங்கப்பூர் தொடர்ந்து இணைந்திருப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், விமான நிலையத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் விமான நிலையச் சமூகத்தினர் அளித்து வரும் பங்களிப்பையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் அங்கீகரிப்பதாக ஆணையம் கூறியிருக்கிறது.

