இந்திய நிலவரம் குறித்து உலக நிறுவனம் கவலை

இந்திய நிலவரம் குறித்து உலக நிறுவனம் கவலை

2 mins read
5075d672-d174-46c8-8f40-0fcaaa7ad9b8
ஷிக்கான் நகரில் உள்ள தமது குடியிருப்பு வளாகத்தை 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை (இடது). படம்: டுவிட்டர்/ஏஎன்ஐ -

பல மாநி­லங்­க­ளி­லும் கொவிட்-19 பாதிப்­பும், மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படு­வ­தும், இறப்­பும் தொடர்ந்து அதி­கரித்­த­வண்­ணம் இருப்­ப­தால் இந்­தி­யா­வில் கொரோனா பர­வல் நிலைமை தொடர்ந்து பெரி­தும் கவலை அளிப்­ப­தாக உள்­ளது என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்து இருக்­கிறது.

ஆயி­ரக்­க­ணக்­கான ஆக்­சி­ஜன் செறி­வூட்­டி­கள், கூடா­ரங்­கள், நட­மா­டும் மருத்­து­வ­ம­னை­கள், முகக்­க­வ­சங்­கள், மற்ற மருத்­து­வத் தள­வா­டங்­கள் ஆகி­ய­வற்றை இந்­தி­யா­விற்கு அனுப்­பி­யுள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வ­னத்தின் தலைமை இயக்கு­நர் டெட்­ரோஸ் கேப்­ரி­யே­சுஸ் கூறியுள்­ளார்.

"கொவிட்-19 தொற்­றால் உல­கில் இது­வரை 3.3 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் பலி­யா­கி­விட்­ட­னர். இரண்­டாம் ஆண்­டாக நாம் அத்­தொற்றை எதிர்­கொண்டு வரும் நிலை­யில், கடந்த ஆண்­டை­விட இவ்­வாண்­டில் அது இன்­னும் அதி­க­மான உயிர்ச்­சே­தத்தை ஏற்­படுத்­தக்­கூ­டும்," என்று டெட்­ரோஸ் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும், இந்­தியா மட்­டும் அவ­ச­ர­கா­லத் தேவை­களை எதிர்­கொண்டு வர­வில்லை எனக் குறிப்­பிட்ட அவர், நேப்­பா­ளம், இலங்கை, வியட்­னாம், கம்­போ­டியா, தாய்­லாந்து, எகிப்து உள்­ளிட்ட பல நாடு­க­ளி­லும் கொரோனா பாதிப்­பும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­ப­டு­வதும் அதி­க­ரித்து வரு­வதைச் சுட்­டி­னார்.

"தடுப்­பூ­சி­களில் பெரும்­ப­கு­தியை வாங்கி வைத்­துள்ள சில பணக்­கார நாடு­கள், தொற்று அபா­யம் குறை­வாக உள்ள பிரி­வி­ன­ருக்­கும் இப்­போது தடுப்­பூசி போட்டு வரு­கின்றன," என்று திரு டெட்­ரோஸ் சொன்­னார்.

"சில நாடு­கள் தங்­க­ளின் குழந்­தை­களுக்­கும் இளம்­ப­ரு­வத்­தி­ன­ருக்­கும் தடுப்­பூசி போட விரும்­பு­வது எங்களுக்குப் புரி­கிறது. ஆனால், இவ்­வே­ளை­யில் அதனை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டும். மாறாக, தடுப்­பூ­சி­களை 'கொவேக்ஸ்' திட்­டத்­திற்கு நன்­கொ­டை­யாக அளிக்க வேண்­டும்," என்று அவர் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

"ஏனெ­னில், குறைந்த, கீழ்­நிலை நடுத்­தர வரு­மான நாடு­களில், சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குப் போடு­வ­தற்­குக்­கூட போது­மான அள­வில் தடுப்­பூசி விநி­யோ­கம் இல்லை. இப்­போ­தை­க்கு, தடுப்­பூசி விநி­யோ­கத்­தில் 0.3% மட்­டுமே குறைந்த வரு­மான நாடு­க­ளைச் சென்­ற­டை­கிறது," என்­றும் திரு டெட்­ரோஸ் தெரி­வித்­தார்.