கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு சிங்கப்பூர் புத்துயிர் பெற்று தொடர்ந்து வெற்றி நடைபோட ஐந்து பரிந்துரைகளை மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு முன்வைத்துள்ளது.
மின்னிலக்க அணுகு
முறையை சிங்கப்பூர் கடைப்
பிடிக்க வேண்டும் என்றும் அதன்மூலம் உள்ளூர் வர்த்தகங்களுக்கும் மக்களுக்கும் எல்லையற்ற வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் பணிக்குழு கூறியது.
அதுமட்டுமல்லாது, நீடித்து நிலைத்திருக்கவும் வலிமை
யுடன் செயல்படவும் வர்த்தகங்
களுடனும் பொதுமக்களுடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அது தெரிவித்தது.
கொவிட்-19 நெருக்கடி
நிலைக்குப் பிறகு சிங்கப்பூரின் பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்கத் தேவையான திட்டங்களை வகுக்க கடந்த ஆண்டு மே மாதத்தில் இப்பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், 118 பக்கங்
கள் கொண்ட அறிக்கை ஒன்றைப் பணிக்குழு நேற்று வெளியிட்டது. அதில் சிங்கப்பூரின் உருமாற்றத்துக்குத் தேவையான ஐந்து பரிந்துரைகளை அது கோடிட்டுக் காட்டியது. புதிய மெய்நிகர் தளங்களை உருவாக்குவது, நீடித்த நிலைத்தன்மையிலிருந்து கிடைக்கும் வாய்ப்பு களைப் பயன்படுத்திக்கொள்வது, உலகளாவிய நிலையில் வெற்றியாளர்களையும் துடிப்புள்ள, வலிமைமிக்க சிங்கப்பூரர்களையும் உருவாக்குவது, கூட்டணிகளுக்கான நடவடிக்கை மூலம் தனியார்-அரசாங்க அமைப்புகள் இடையே பங்காளித்துவத்தை நடைமுறைப்படுத்துவது, அனைத்துலகப் பங்காளித்துவத்தை வலப்படுத்துவது (குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள்) ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
மாற்றத்துக்கான கட்டாயத்தை கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்
படுத்தியிருப்பதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் எதிர்காலப் பொருளியல் மன்றத்துக்குத் தலைமைதாங்கும் துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'சிங்கப்பூர் டுகெதர் இயக்கம்' அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இயக்கத்தின்கீழ் சிங்கப்பூரர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவர். இந்த உணர்வை அடிப்படையாகக் கொண்டு தற்போது இந்த ஐந்து பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.
பணிக்குழு முன்வைத்துள்ள ஐந்து பரிந்துரைகளுக்கும் ஆறு முக்கிய மாற்றங்கள் தூண்டு
கோலாக விளங்குகின்றன. அதிகரித்து வரும் அரசியல் மற்றும் பொருளியல் நெருக்கடியால் மாறிவரும் உலகளாவிய நடைமுறைகள், தொழிற்துறைகள் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவது, விநியோகம் மற்றும் உற்பத்தியில் செயல்திறன்- மீள்திறன் இடையிலான சம
நிலையை மீண்டும் ஏற்படுத்துவது, மின்னிலக்க உருமாற்றம் மற்றும் புத்தாக்கத்தை விரைவுபடுத்துவது, பயனீட்டாளர்களின் விருப்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், நீடித்த நிலைத்தன்மை மீது அதிகரித்திருக்கும் கவனம் ஆகியவை அந்த ஆறு மாற்றங்களாகும். இதற்
கிடையே, கொவிட்-19 நெருக்கடிநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மின்னிலக்க அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது குறித்து சிங்கப்பூரில் உள்ள வர்த்தகங்களையும் தனிநபர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. கொரோனா சூழலுக்குப் பிறகு மின்னிலக்க அணுகுமுறையை சரியான வகையில் முழுமையாகப் பயன்படுத்தினால் புதிய வாய்ப்புகளை சிங்கப்பூரால் உருவாக்க முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது. நம்பிக்கை, வேகம், சீரான செயல்பாடு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் சிறந்து விளங்குவதாகவும் அவற்றில் மின்னிலக்கச் சேவைகளைப் புகுத்துவது நன்மை பயக்கும் என்றும் பணிக்குழு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
"இவ்வளவு காலமாக சவால்களை முறியடித்து முக்கிய விமானப் போக்குவரத்து மையம், அனைத்துலக கடற்துறை மையம், நிதித்துறை மற்றும் நிபுணத்துவச் சேவை மையம் என முத்திரை பதித்துள்ளோம். இதையே நாம் இப்போது மெய்நிகர் உலகில் செய்ய வேண்டும்," என்று பணிக்குழு கூறியது.

