நடமாடச் சிரமம் உள்ளோருக்கு வீடு தேடி வரும் தடுப்பூசித் திட்டம்

நடமாடச் சிரமம் உள்ளோருக்கு வீடு தேடி வரும் தடுப்பூசித் திட்டம்

1 mins read

முதுமை வயது உள்ளிட்ட பல காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேற முடியாதோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால், அவர்களது வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும் சேவை வழங்கப்படவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மருத்துவர் மற்றும் தாதியர் அடங்கிய தடுப்பூசிக் குழுக்கள், இதற்காக வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடுவர். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதை அறிவித்தார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 71 விழுக்காட்டினர், தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர். 45 முதல் 59 வயதுப் பிரிவினரில் கிட்டத்தட்ட 66 விழுக்காட்டினர் அவ்வாறு செய்துள்ளனர். மூத்தோரில் சிலர் கட்டிலில் படுத்த படுக்கையாக அல்லது வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கக்கூடும் என்று அமைச்சர் ஓங் சொன்னார். இந்தப் பிரிவினரின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட சுகாதார மேம்பாட்டு வாரியம், ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான முகவை (ஏஐசி) ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்படும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் மக்களின் விகிதம், நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.