சிங்கப்பூர் போன்ற சிறிய, பொதுப் படையான நாடு எதுவும் கொவிட்-19க்கு எதிரான முயற்சி களைத் தளர்த்திவிட முடியாது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
நாடு சீரான நிலையில் இருந்தபோதிலும் விரைவாகப் பரவக்கூடிய புதிய கிருமித்தொற்று குழுமம், கட்டுப்பாடு களைக் கடுமையாக்கவும் மறுபடியும் விதிகளை நடப்புக்குக் கொண்டு வரவும் காரணமாகிவிடுகிறது என்றார் அவர்.
"கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக நாம் கருதும் ஒவ்வொரு வேளையும் வேறு ஒரு புதிய கோணத்தில் நிலவரம் மாறிவிடுகிறது.
"கிருமி உருமாறியிருக்கலாம். நாம் கண்டறியாத புதிய இடத்தில் அது இருக்கலாம். ஆனால் ஒருபோதும் நாம் நமது முயற்சிகளைத் தளர்த்திவிடக் கூடாது. என்ன நடந்துவிடும் என்று கற்பனையாகக் கருதுவதற்கு ஒருபடி மேல் சென்று சிந்திக்க வேண்டும்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
அமெரிக்க வர்த்தக சபையில் நேற்று நடைபெற்ற பொருளியல் மீட்சி தொடர்பான உலகக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் திரு லீ பேசினார். உலக அளவிலான பொருளியல் மீட்சிக்கான வாய்ப்புகள் பற்றியும் அவற்றை அடைய எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விவாதிக்க அரசாங்க, வர்த்தகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இக்கருத்தரங்கு அமைகிறது.
மெய்நிகர் வடிவில் நடைபெற்ற நிகழ்வில் அமெரிக்க வர்த்தக சபையின் நிர்வாக துணைத் தலைவர் மைரோன் பிரிலியண்ட்டிடம் பேசுகையில், 2003ஆம் ஆண்டில் சார்ஸ் கிருமித்தொற்றைச் சமாளித்த அனுபவம் சிங்கப்பூருக்கு இப்போது கைகொடுப்பதாக திரு லீ சொன்னார்.
"அடுத்த புது வகையான நோய்க்கு அந்த அனுபவம் எங்களைத் தயார்ப்படுத்தியது. என்ன நடக்கிறது என்பதையும் ஒட்டுமொத்தமாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள மக்களுக்கும் அது உதவியது," என்றார் பிரதமர்.
இப்போதைய கொள்ளைநோய் அனைத்துலக ஒத்துழைப்பின் அவசியத்தை ஒவ்வொருவருக்கும் உணர்த்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.
"தொடக்கத்தில் கொவிட்-19 கொள்ளைநோய் தொற்றிவிடாதிருக்க பிபிஇ கவச உடையை வாங்குவதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் அந்தக் கவனம் தடுப்பூசி மீது திரும்பி இருக்கிறது.
"எது எப்படி இருப்பினும் விநியோகத் தொடர் அறுந்துவிடவில்லை. உங்களுக்குத் தேவையான ஐஃ போனை இப்போதும் நீங்கள் வாங்கலாம். அதேபோல கார்களை உங்களால் வாங்க முடியும்.
"இருந்தபோதிலும் தன்னிறைவு என்று வரும்போதும் உலகம் அதில் இன்னும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை. அதாவது ஒட்டுமொத்த தற்சார்பு நிலையை உலக நாடுகள் இன்னும் எட்டவில்லை.
"சிங்கப்பூர் போன்ற சிறிய, பொதுவான நாடு தனது எல்லைகள் மூடப்படுவதைச் சமாளிக்க இயலாது.
"இதர பெரிய நாடுகள் தங்களது எல்லைகளை நீண்டகாலத்திற்கு மூடி வைத்திருக்கலாம். ஆனால் சிங்கப்பூரில், கொவிட்-19 சிரம காலத்திலும் வெளியில் போக வரவேண்டி இருக்கிறது. உணவு தேவைப்படுகிறது. எரிபொருளும் தேவைப்படுகிறது.
"நம்மை நாம் பாதுகாத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையோடு நடந்துகொண்டாலும் நம்மால் இயன்ற அளவுக்குத்தான் எல்லைகளை மூட இயலும். இருப்பினும் உலக நாடுகள் தங்களது எல்லைகளை மீண்டும் முழுமையாகத் திறந்து கட்டுபாடுகள் இல்லாத பயணத்திற்குத் திரும்ப நீண்டகாலம் பிடிக்கும்.
"தடையற்ற பயணம் பற்றி நாடுகள் பேசும்போது இருதரப்பு நம்பிக்கை இங்கு அவசியமாகிறது. சிங்கப்பூர் அதைவிட பாதுகாப்பான நாடுகளு டன் மட்டுமே அத்தகைய ஏற்பாட்டை செய்துகொள்ள விரும்புகிறது. இந்த வகையில் ஒன்றோடொன்று பொருந்து வது என்பது எளிதானதல்ல.
"இருப்பினும், நாட்டின் சமூகங்கள் தடுப்பூசிகளைப் போட்டு முடித்த பின்னர், நம்பிக்கை மீண்டும் ஏற்பட்ட பின்னர், நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் அதுபோன்ற பயண ஏற்பாடு சாத்தியப்படும்," என்றார் பிரதமர் லீ.

