இந்தியத் தூதரிடம் அக்கறையை வெளிப்படுத்திய அமைச்சு
'புதிதாக உருமாறிய' கொவிட்-19 கிருமி சிங்கப்பூரில் காணப்பட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த கருத்தில் உண்மை இல்லை என சிங்கப்பூர் பதிலளித்துள்ளது. முதலமைச்சர் போன்ற பதவியில் இருப்பவர் இத்தகைய கருத்தை வெளியிடும் முன்னர் உண்மைநிலையை அறியத் தவறிவிட்டதாகவும் இது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கெஜ்ரிவால் நேற்று முன்தினம் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற கூற்றுகளை வெளியிட்டது வருத்தமளிப்
பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
'சிங்கப்பூரில் உருமாறிய கிருமி' குழந்தை
களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது எனவும் இந்தியாவில் மூன்றாவது கிருமித்தொற்று அலையை இது உருவாக்கக்கூடும் எனவும் கெஜ்ரிவால் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தி மொழியில் டுவிட்டர் வாயிலாக பதிவிட்ட தகவலில் சிங்கப்பூருக்கும் டெல்லிக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை ரத்து செய்யவேண்டும் என இந்திய அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக நேற்றுக் காலை சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதர் திரு பி. குமரனைச் சந்தித்து வெளியுறவு அமைச்சு தனது அக்கறைகளைத் தெரிவித்ததாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "'சிங்கப்பூரில் உருமாறிய கிருமி' என்று எதுவும் இல்லை. அரசியல்வாதிகள் உண்மை நிலையைத் தெரிந்து பேசவேண்டும்," என்று கூறியுள்ளார்.
பிரசித்தி பெற்ற 'நேச்சர்' (Nature) அறிவியல் சஞ்சிகையில் மே 11ஆம் தேதி வெளியான கட்டுரை ஒன்றை டாக்டர் விவியன் தமது பதிவுடன் இணைத்துள்ளார்.
பி1617 போன்ற உருமாற்றம் கண்ட கிருமி உலகின் 40 நாடுகளுக்குப் பரவும் முன்னர் எவ்வாறு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியது என்பதை அக்கட்டுரை விவரிக்கிறது.
டாக்டர் விவியனுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஒரு டுவிட்டர் தகவலைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "கெஜ்ரிவால் இந்தியாவைப் பிரதிநிதித்துப் பேசவில்லை. கொவிட்-19க்கு எதிரான போரில் சிங்கப்பூரும் இந்தியாவும் உறுதி மிக்க பங்காளிகளாகச் செயல்பட்டு வருகின்றன.
"தளவாட மையமாகவும் ஆக்சிஜன் விநியோகிப்பாளராகவும் சிங்கப்பூர் ஆற்றிவரும் பங்கு போற்றுதலுக்கு உரியது," என்று திரு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், "பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவோர் நீண்டகால பங்காளித்துவத்துக்கு அக்கருத்துகள் பங்கம் ஏற்படுத்திவிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்," என கெஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிடாமல் திரு ஜெய் சங்கர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் விவியன் வெளியிட்ட மற்றொரு டுவிட்டரில் திரு ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்ததோடு, "இரு நாடுகளின் நிலைமைக்குத் தீர்வுகாண்பதில் கவனம் செலுத்தி ஒருவருக்கு ஒருவர் உதவுவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கொவிட்-19 உருமாற்றக் கிருமிகள் தொடர்பிலோ விமானப் போக்கு
வரத்துக் கொள்கை தொடர்பிலோ கருத்துகளை வெளியிட கெஜ்ரிவாலுக்கு எவ்வித அதிகாரமுமில்லை," என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வரின் கருத்து செய்தித்
தளங்களில் வெளியான ெசவ்வாய்க்கிழமை இரவே சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு இந்தக் கருத்தில் உண்மை இல்லை என மறுத்தது.
மேலும், "அண்மைய வாரங்களாகப் பரவி வரும் கொவிட்-19 சம்பவங்களில் காணப்பட்ட B.1.617.2 என்னும் உருமாற்றக் கிருமி முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது," என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சமூக ஊடகக் கருத்து வெளியான செவ்வாய்க்கிழமை பின்னேரத்தில் சிங்கப்பூரின் போக்கு
வரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் ஃபேஸ்புக் வாயிலாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "முதல்வர் கெஜ்ரிவாலின் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்து ஏமாற்றம் அளிக்கிறது," என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார். இவரைப்போல இங்குள்ள பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

