கொவிட்-19 தொற்று அதிகரித்ததை அடுத்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பாதிப்பை எதிர்கொண்டுவரும் உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள், வாடகைத் தள்ளுபடி, மானியங்கள் ஆகிய வழிகளில் சற்று நிவாரணம் பெறுவர்.
அந்த வகையில், மொத்தம் $9 மில்லியன் உதவி வழங்கப்பட இருக்கிறது.
மே, ஜூன் மாதங்களுக்கான வாடகையில் பாதித் தொகையை தேசிய சுற்றுப்புற வாரியம் தள்ளுபடி செய்யும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று தெரிவித்தார்.
இதன்மூலம், சுற்றுப்புற வாரியம் அல்லது அதனால் நியமிக்கப்பட்ட நடத்துநர்களால் நிர்வகிக்கப்படும் உணவங்காடி நிலையங்களில் செயல்படும் கிட்டத்தட்ட 6,000 உணவுக்கடைக்காரர்கள் பலன் அடைவர்.
வாடகைத் தள்ளுபடி வகையில் கிட்டத்தட்ட $5.5 மில்லியன் உதவி வழங்கப்படும்.
ஜூன் 1ஆம் தேதி முதல் குத்தகைக்காலம் தொடங்கும் புதிய உணவுக் கடைக்காரர்களுக்கும் அரை மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும்.
"அண்மையில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உணவங்காடி நிலைய உணவுக்கடைக்காரர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, பான நிலையங்களில் அமர்ந்து உண்ண முடியாது. அதிகமானோர் வீட்டிலிருந்தபடி வேலை செய்வதாலும் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து கற்று வருவதாலும் வாடிக்கையாளர் வருகை குறைந்திருக்கும்," என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சருமான டாக்டர் கோர் கூறினார்.
அத்துடன், உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து உண்ண முடியாத இந்தக் காலகட்டத்தின்போது மேசை துடைத்தல், மையப்படுத்தப்பட்ட பாத்திரம் கழுவும் சேவை போன்றவற்றுக்கான கட்டணத்திற்கு வாரியம் 100% மானியம் வழங்கும் என்றும் டாக்டர் கோர் தெரிவித்தார். இந்த வகையில், ஏறத்தாழ $3.3 மில்லியன் மானியம் வழங்கப்படும்.
"பாதுகாப்பாகவும் சுவையாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் தொடர்ந்து உணவு வழங்கும் வகையில், தங்களது கடைகளைத் தூய்மையாகவும் திறந்தும் வைத்திருக்க கடுமையாக உழைத்து வரும் உணவுக்கடை நாயகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று டாக்டர் கோர் சொன்னார்.
அத்துடன், உணவு வாங்கச் செல்லும்போது மறுமுறை பயன்படுத்தக்கூடிய கலன்களை எடுத்துச் செல்லும்படி பொதுமக்களை அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தச் சிரமமான காலகட்டத்தைச் சமாளிக்க வாடகைத் தள்ளுபடி உணவுக்கடைக்காரர்களுக்குக் கைகொடுக்கும் என்றார் பூன் லே உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் ஆன்டனி லோ.
"உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து உண்ண விதிக்கப்பட்டு இருக்கும் தடை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை வாரியம் அறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
"உணவுக்கடைக்காரர்களின் கவலைகள் சிலவற்றைப் போக்கும் வகையில் விரைந்தும் சரியான நேரத்திலும் வாரியம் நடவடிக்கை எடுத்திருப்பதை உணவுக்கடைக்காரர்கள் பாராட்டுகின்றனர். நாங்களும் எதிர்கால, எதிர்பாராத சூழல்களுக்கு ஆயத்தமாகும் வகையில் மீட்சித்திறன் கொண்டவர்களாகவும் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்பவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்," என்று வணிகர் சங்கக் கூட்டமைப்பின் தலைவருமான திரு லோ தெரிவித்தார்.

