கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் உத்திகளில் ஒன்றாக 80% அரசாங்க ஊழியர்களும் 40% தனியார் துறை ஊழியர்களும் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கப் பணியாளர்கள் 750,000 பேரும் தனியார் துறை ஊழியர்கள் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் பேரும் இதில் அடங்குவர் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.
"பேருந்து, இலகு ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிகள் கொள்ளளவு 50 விழுக்காடாகக் குறைக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.
மலேசியாவில் இப்போது நடப்பிலிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் கடுமையாக்கப்படும் என்று நேற்று முன்தினம் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்த விவரங்களை நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் சப்ரி வெளியிட்டார்.
புதிய கட்டுப்பாடுகளின்படி, கடைத்தொகுதிகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
அமலாக்க நடவடிக்கைகளும் சாலைத் தடுப்புகளும் அதிகப்படுத்தப்படும்.
மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படுவதாக அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார்.
நாளை மறுநாள் 25ஆம் தேதி முதல் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரும்.
மலேசியாவில் மூன்றாம் முறையாக நாடு முழுமைக்குமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த 12ஆம் தேதி அறிவிக்கப் பட்டது. ஆனாலும், கொரோனா பரவல் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது.
அண்மைய நாள்களாக, மலேசியாவில் அன்றாடம் 6,000க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. நேற்று அங்கு புதிதாக 6,320 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது; 50 பேர் இறந்து விட்டனர்.
நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
இதனிடையே, கோலாலம்பூர் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பொது மருத்துவமனைகள் 113% கொள்ளளவுடன் செயல்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
"அதிகமான நோயாளிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அதைச் சமாளிக்க, படுக்கை மற்றும் சில கருவிகளுடன் பொதுப் பிரிவுகளும் தற்காலிகமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளாக மாற்றப்பட வேண்டியுள்ளது. இருந்தாலும், கிருமித்தொற்றால் பாதிக்கப்படாத மற்ற நோயாளிகளுக்கு, தேவையான முக்கிய மருத்துவப் பராமரிப்பு கிடைக்கும் வாய்ப்பை இது குறைக்கிறது," என்று ஃபேஸ்புக் வழியாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறியிருக்கிறார்.
மலேசியாவில் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும்.

