'கடும் கட்டுப்பாடுகளால் கிருமித்தொற்று அதிகரிக்கவில்லை'

'கடும் கட்டுப்பாடுகளால் கிருமித்தொற்று அதிகரிக்கவில்லை'

1 mins read

சிங்­கப்­பூர் எடுத்த கடும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக கடந்த ஒரு வாரத்­தில் புதிய கொவிட்-19 தொற்று பாதிப்­பு­கள் அதி­க­ரிக்­க­வில்லை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்து இருக்­கி­றார்.

உணவு நிலை­யங்­களில் அமர்ந்து உண்­ணத் தடை, சமூக ஒன்­று­கூடல்­க­ளுக்­குக் கட்­டுப்­பாடு உட்­பட இம்­மா­தம் 16ஆம் தேதி முதல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டன. அது­மு­தல், அன்­றாட புதிய தொற்று பாதிப்பு 20 முதல் 30 என்ற அள­வி­லேயே இருந்து வரு­வ­தாக திரு ஓங் கூறி­னார்.

"முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­வி­டில், பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளா­வி­டில், தொடர்­பு­க­ளின் தட­ம­றி­தல் இடம்­பெ­றா­வி­டில் ஏற்­படும் பாதிப்பு அதி­கரிப்­பைப் போன்ற நிலையை இப்­போது காண முடி­வ­தில்லை. அத்­த­கைய சூழல்­களில், அஞ்­சத்­தக்க வகை­யில் வழக்­க­மாக ஒவ்­வொரு வார­மும் பாதிப்பு இரட்­டிப்­பா­க­லாம்," என்­றார் அமைச்­சர்.

இங்கு கொரோனா பாதிப்பு நிலைப்­பட்டு வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"தொற்று நில­வ­ரம் எத்­தி­சை­யில் செல்­கிறது என்­பதை அறிய இன்­னும் சில நாள்­க­ளைக் கவ­னிக்க வேண்­டி­யுள்­ளது. ஆனா­லும் நமது பங்­கைத் தொடர்ந்து ஆற்­று­வ­தன் மூலம், அதனை நாம் ஒடுக்­க­லாம்," என்று திரு ஓங் சொன்­னார்.

'புளா­ஸம் சீட்ஸ்' அறப்­பணி அமைப்பு, 'வேற்­று­மை­யில் ஒற்­றுமை' எனும் புதிய இயக்கத்தை மெய்­நிகர் முறை­யில் நேற்று அறிமுகம் செய்தது. அதில் பங்கேற்ற­போது அமைச்­சர் ஓங் இவ்­வாறு பேசி­னார்.