கொவிட்-19 இரண்டாவது முடக்கத்தைத் தவிர்க்க கிருமி பரவல் தடுப்பு அரண் உத்தி தீவிரம்

கொவிட்-19 இரண்டாவது முடக்கத்தைத் தவிர்க்க கிருமி பரவல் தடுப்பு அரண் உத்தி தீவிரம்

2 mins read
4cff3f9d-67eb-4c1a-8e27-96787591959f
அண்மையில் டான் டோக் செங் மருத்துவமனையில் இந்த உத்தி நடப்புக்கு வந்து ஓரளவுக்கு வெற்றி பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் கிருமி பரவல் தடுப்பு அரணமைப்பு உத்தி அண்மையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தி மூலம் இதர பகுதிகளுக்குக் கிருமி பரவுவது தடுக்கப்படும் என்பதால் இந்த ஏற்பாடு தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவுவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹோக் பொது சுகாதாரத் துறையின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் தெரிவித்தார்.

இந்த உத்தி, தொற்று உள்ள ஒரு பகுதியை முடக்கி வைக்கும் அடிப்படையிலானது. அந்த இடத்தில் இருக்கக்கூடிய மக்கள் பொதுமக்களுடன் மேலும் கலந்துறவாடுவது குறைக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் எந்த அளவுக்குத் தொற்று இருக்கிறது என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ளவும் இதன் மூலம் வழி ஏற்படுகிறது என்று அவர் விளக்கினார்.

இருந்தாலும் இந்த உத்தியை கொவிட்-19 தொற்று தெரியவரும் அடிப்படையில் முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதே போன்ற அரணமைப்பு உத்தி 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று ஏற்பட்டபோதும் பயன்படுத்தப்பட்டது.

சார்ஸ் கிருமி தொற்றிய நோயாளிகளுடன் அணுக்கத் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

அண்மையில் டான் டோக் செங் மருத்துவமனையில் இந்த உத்தி நடப்புக்கு வந்து ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தடுப்பு அரணுக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் தடமறிவது, கட்டாய பரிசோதனை, முழுமூச்சான துப்புரவு உள்ளிட்ட பலவும் மேற்கொள்ளப்படுகின்றன.

தீவிரமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் மருத்துவத் துறையைச் சேர்ந்த மக்கள்தொகை சுகாதார அறிவியல் நிலையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜோசிப் கார் கூறினார்.

சிங்கப்பூரின் கிருமிப் பரவல் தடுப்பு அரண் உத்தி சென்ற ஆண்டு முதல் மேம்பட்டு வந்து இருக்கிறது. இப்போது இத்தகைய அரணுக்கு உட்படுத்தப்படும் பகுதிகள் பெரியவையாக இருக்கின்றன.

இதனிடையே, தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாவ் சுவீ ஹோக் பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த தொற்றுநோய் வல்லுநர் இணைப் பேராசிரியர் ஷூ லி யாங், பொருளியலின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்பு இல்லாத தொற்றுகள் தலைகாட்டத் தொடங்கும்போது பொது முடக்கத்திற்கு அது வழிகோலக் கூடும் என்று கருத்துரைத்தார்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தொற்றுகள் அதிகரிக்கும் போது அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எப்படியோ கிருமி வெளியாகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கும்.

புதிய உருமாறிய கிருமிகள் அதிக வீரியமாகச் செயல்படுகின்றன என்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால் இதில் தடுப்பு அரண் உத்தி ஆற்றல் குறைவானது என்று கூறுவதற்கு இடமில்லை என்றும் இணைப் பேராசிரியர் விளக்கினார்.