சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் நடப்புக்கு வந்துள்ள நிலையில், புதிதாகப் பதவியேற்ற திமுக அரசு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. நம் அனைவரும் ஒன்றிணைந்துதான் அதனை ஒழிக்க வேண்டும். ஊரடங்கு நமது நன்மைக்குத்தான் என உணர்ந்து அனைவரும் வீட்டில் இருங்கள்," என்று ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை யாருக்கும் கொடுக்க மாட்டேன், யாரிடமும் பெற மாட்டோன் என உறுதி ஏற்க வேண்டும் என தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்த அவர், "ஊரடங்கு கசப்பு மருந்து தான். ஆனாலும் அருந்தியே ஆக வேண்டும். அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என கெஞ்சி கேட்கிறேன்," என்றும் காணொளி வாயிலாக மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மாநிலத்தின் தினசரி காய்கறி மற்றும் பழங்கள் தேவை 18,000 டன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், 4,380 வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று அவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.
சென்னையில் மட்டும் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள், அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மாநகராட்சியின் 100 வார்டுகளில் 125 வாகனங்களில் நடமாடும் வாகனங்கள் விற்பனை தொடங்கியது.
ஒரு பையில் கத்திரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, தேங்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா என 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு வார்டு வாரியாகச் சென்று வழங்கப்படுகிறது. இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.
பல சரக்கு, இறைச்சி போன்ற பொருள்களையும் இதுபோல விநியோகிக்கத் திட்டம் இருப்பதாகவும் மதுரை மாநகரில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊரடங்கு தொடங்கிய முதல் நாளான இன்று சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடிக் கிடந்ததாகக் கூறப்பட்டது. சென்னையில் மட்டும் 20,000 போலிசார் மக்கள் வெளியில் வராமல் கண்காணிக்குப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேவையின்றி வெளியே நடமாடுவோர் மீது போலிசார் கடும் நடவடிக்கை எடுப்பதால் முக்கிய நகரங்களில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகள் பெரும்பாலும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

