மலேசியா: ரயில்கள் மோதலில் காயமுற்ற அறுவர் கவலைக்கிடம்

மலேசியா: ரயில்கள் மோதலில் காயமுற்ற அறுவர் கவலைக்கிடம்

2 mins read

மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் நேற்று முன்­தி­னம் மாலை­யில் இரு இலகு ரயில்­கள் மோதிக்­கொண்ட விபத்­தில் காய­ம­டைந்­த­வர்­களில் அறு­வ­ரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த ரயில்­கள் மோதிக்­கொண்­ட­தற்கு மனி­தத் தவறே கார­ணம் என முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

"ரயில் ஓட்­டு­நர் தவ­றான திசை­யில் ரயிலை இயக்­கி­யதே விபத்து நிக­ழக் கார­ணம்," என்று மலே­சி­யப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் நேற்று மெய்­நி­கர் முறை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது கூறி­னார்.

மொத்­தம் 213 பய­ணி­கள் இருந்த ரயில் '40', கம்­போங் பாரு நிலை­யத்­தில் நின்­ற­பின் அதன் தானி­யக்க அமைப்பு பழுதாகி­ விட்­டது. அத­னால், அந்த நிலை­யத்­தில் இருந்து டாங் வாங்கி நிலை­யம் நோக்கி அதை கைமு­றை­யாக இயக்­கிச் செல்­லு­ம் படி அந்த ஓட்­டு­நர் பணிக்­கப்­பட்­டார்.

ஆனால், ரயிலை தெற்கு நோக்கி இயக்­கா­மல் அவர் வட­திசை நோக்கி இயக்­கி­ய­தா­க­வும் அப்­போது தெற்கு நோக்கி வந்­து­கொண்­டி­ருந்த காலி­யான தானி­யக்க ரயில் மீது மோதி­விட்­ட­தா­க­வும் முதற்­கட்­டத் தக­வல்­கள் தெரி­விப்­ப­தாக திரு சியோங் விவ­ரித்­தார்.

கோலா­லம்­பூர் மருத்­து­வ­ம­னை­யில் 64 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கக் கூறிய அமைச்­சர், அவர்­களில் அறு­வரின் நிலை கவ­லைக்­கி­ட­மா­க­வும் 15 பேரின் நிலை பகு­தி­ய­ளவு கவ­லைக்­கி­ட­மா­க­வும் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

ரயில்­கள் மோதி­ய­தில் 47 பேர் கடு­மை­யா­கக் காய­முற்­ற­தா­க­வும் மேலும் 166 பேர் இலே­சான காய­ம­டைந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

போக்­கு­வ­ரத்து அமைச்சு உய­ர­தி­கா­ரி­களை­யும் ரயில் துறை நிபு­ணர்­க­ளை­யும் கொண்ட விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­படும் என்று திரு சியோங் கூறி­னார்.

விபத்து தொடர்­பில் விசா­ரணை நடத்­தும்­படி போக்­கு­வ­ரத்து அமைச்­சை­யும் ரயில் சேவை வழங்­கு­ந­ரான 'பிர­சா­ரனா மலே­சியா' அமைப்­பை­யும் கோரியிருக்கும் பிரதமர் முகை­தீன் யாசின், கடும் நட­வடிக்கை எடுக்­க­வும் வலி­யு­றுத்தியுள்ளார்.

இத­னி­டையே, காய­ம­டைந்த அனை­வரின் மருத்­து­வச் செல­வு­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்­வ­தாக அறி­வித்­திருக்கும் பிர­சா­ரனா அமைப்பு, விபத்­தின்­போது ரயி­லில் இருந்த அனை­வ­ருக்­கும் ஆயி­ரம் மலே­சிய ரிங்­கிட் இழப்­பீடு (S$320) வழங்­கப்­படும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

"இவ்­வி­பத்­தின் கார­ண­மாக எவ­ரே­னும் வரு­மா­னத்தை இழக்க நேரந்­தால் அவ­ரது வாழ்க்­கைச் செல­வு­க­ளை­யும் பிர­சா­ரனா ஏற்­றுக்­கொள்­ளும்," என்று அமைச்­சர் சியோங் கூறி­யுள்­ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு கெலானா ஜெயா எல்­ஆர்டி ரயில் சேவை தொடங்­கப்­பட்­ட­பின் அவ்வழித்தடத்தில் நிகழ்ந்த முதல் விபத்து இதுதான்.