53 நாடுகளுக்குப் பரவிவிட்டது

53 நாடுகளுக்குப் பரவிவிட்டது

2 mins read

இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட பி1617 உருமாறிய கொரோனா

இந்­தி­யா­வில் முதன்­மு­றை­யா­கக் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய கொரோனா கிருமி இப்­போது அதி­கா­ர­பூர்­வ­மாக 53 நாடு­களில் அல்­லது பகு­தி­களில் பதி­வாகி இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வனம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­விக்­கிறது.

'பி1617' எனக் குறிப்­பி­டப்­படும் அந்த உரு­மா­றிய கொரோனா கிருமி மேலும் எட்­டுப் பகு­தி­களில் காணப்­ப­டு­வ­தாக அதி­கா­ர­பூர்­வ­மற்ற தக­வல்­கள் உலக நிறு­வ­னத்­திற்­குக் கிடைத்­துள்­ளன.

அந்த உரு­மா­றிய கிருமி, மேலும் சற்று உரு­மா­றி­யதை அடுத்து, பி16171, பி16172, பி16173 என மூன்று வகை­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அவற்­றில், முதல் வகை 41 நாடு­க­ளி­லும் இரண்­டாம் வகை 54 நாடு­க­ளி­லும் மூன்­றாம் வகை ஆறு நாடு­க­ளி­லும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

நிறு­வ­னத்­தின் வாராந்­திர நோய்த்­தொற்­றி­யல் தக­வல் அறிக்­கை­யில் இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

பி1617 உரு­மா­றிய கிருமி அதிக­மா­கப் பர­வும் தன்மை கொண்­டது எனக் குறிப்­பிட்­டுள்ள அந்த அறிக்கை, அத­னால் ஏற்­படும் நோயின் தீவி­ரத்­தன்மை, நோய் தொற்­றும் அபா­யம் ஆகி­யவை குறித்து ஆராய்ந்து வரு­வ­தா­கக் கூறி­யி­ருக்­கிறது.

உல­க­ள­வில் கடந்த ஒரு வார­மாக, புதிய கொரோனா பாதிப்­பு­களும் உயி­ரி­ழப்­பு­களும் தொடர்ந்து குறைந்து வந்­துள்­ளன. அக்­கா­ல­கட்­டத்­தில், புதி­தாக 4.1 மில்­லி­யன் பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்; 84,000 பேர் இறந்­து­விட்­ட­னர். முந்­திய வாரத்தை ஒப்­பு­நோக்க, முறையே இவை 14 விழுக்­கா­டும் இரண்டு விழுக்­காடும் குறைவு.

கடந்த ஏழு நாள்­களில், ஐரோப்­பா­வில் புதிய கொரோனா பாதிப்­பு­களும் மர­ணங்­களும் பெரி­தும் குறைந்­துள்­ளன. அத­னைத் தொடர்ந்து, தென்­கி­ழக்­கா­சி­யா­வில் குறை­வா­கப் பதி­வா­கி­யுள்­ளது.

தென், வடஅமெ­ரிக்கா, கிழக்கு மத்­தி­யத் தரைக்­க­டல் பகுதி, ஆப்­பி­ரிக்கா, மேற்கு பசி­பிக் ஆகிய வட்­டா­ரங்­களில் புதிய பாதிப்­பு­க­ளின் எண்­ணிக்கை, முந்­திய வாரத்­தில் பதி­வான அளவை ஒத்­தி­ருந்­தது.

"உல­க­ள­வில் கடந்த நான்கு வாரங்­க­ளாக கொரோனா தாக்­கம் குறைந்து வந்­துள்­ள­போ­தும், இன்­னும் கிருமி தொற்­று­வ­தும் அத­னால் இறப்­ப­தும் அதி­க­மா­கவே இருக்­கிறது. உல­கம் முழு­வ­தும் பல நாடு­க­ளி­லும் புதிய பாதிப்பு குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரித்­துள்­ளது," என்று அந்த அறிக்கை கூறு­கிறது.

கடந்த ஏழு நாள்­களில் ஆக அதி­க­மாக இந்­தி­யா­வில் 1,846,055 பேர் புதி­தாக தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். இது, அதற்கு முந்­திய வாரத்­தைக் காட்­டி­லும் 23% குறைவு. பிரே­சில் (451,424), அர்­ஜெண்­டினா (213,046), அமெ­ரிக்கா (188,410), கொலம்­பியா (107,590) ஆகிய நாடு­கள் அடுத்த இடங்­களைப் பிடித்­தன.