மலேசியாவில் இதற்குமுன்னிராத வகையில் நேற்று ஒரே நாளில் 7,478 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இப்படித் தொடர்ந்து நாளுக்கு நாள் புதிய உச்சமாக கொரோனா தொற்று பதிவாகி வரும் நிலையில், இன்னும் மோசமான நிலை ஏற்படலாம் என்பதால் அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமான காலகட்டம் என்று அந்நாட்டின் சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்து இருக்கிறார்.
புதிய பாதிப்புகள் அதிகரிப்பை அடுத்து, மோசமான நிலையை எதிர்கொள்ள மலேசியர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று டாக்டர் ஹிஷாம் கூறியிருக்கிறார்.
"உலகளவில் நிலவும் கிருமித்தொற்றுச் சூழலை அடுத்து மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய உருமாறிய கிருமிகள் அதிகம் பரவி, அதிகமான இறப்புகளை ஏற்படுத்தவல்லவை. ஆகையால், மக்கள் 'சுயமுடக்கத்தைப்' பின்பற்றுமாறும் முடிந்தவரை அடுத்த இரு வாரங்களுக்கு வீடுகளிலேயே முடங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். மலேசியாவில் கொரோனா தொற்றுச் சங்கிலியை உடைக்க, நாம் இதைச் செய்தாக வேண்டியுள்ளது," என்றார் டாக்டர் ஹிஷாம்.
கிருமிப் பரவல் குறைவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், நாடு தழுவிய தடுப்பூசி நடவடிக்கை உடனடியாக முடுக்கிவிடப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"சிலாங்கூரில் தங்கள் ஊழியர்களுக்காக முதலாளிகள் தடுப்பூசி வாங்க முடியும். அதேபோல, தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் தடுப்பூசி வாங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இல்லையேல், இப்போதைய வேகத்திலேயே சென்றால், மக்கள்தொகையில் குறைந்தது 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட வேண்டும் எனும் இலக்கை நம்மால் எட்டவே இயலாது," என்றார் மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம்.
இந்நிலையில், அறிகுறி இல்லாதோர் பொதுவாக கொரோனா பரிசோதனைக்குச் செல்லமாட்டார்கள் என்பதால் சமூகத்தில் உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று பொதுச் சுகாதார மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஸைனல் அரிஃபின் ஓமர் தெரிவித்துள்ளார்.
'பிரசாரனா' தலைவரிடம் போலிஸ் விசாரணை
இதற்கிடையே, இலகு ரயில்கள் மோதல் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது, பொதுப் போக்குவரத்து சேவை நிறுவனமான 'பிரசாரனா'வின் தலைவர் தஜுதீன் அப்துல் ரஹ்மான் முகக்கவசம் அணிந்திராததை அடுத்து, போலிஸ் அவரை விசாரித்து வருகிறது.
முகக்கவசத்திற்குப் பதிலாக முகம் முழுவதையும் மறைக்கும் விதமாக திரு தஜூதீன் முகக்காப்பு அணிந்திருந்தார். கொவிட்-19 நிலையான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்கி நடக்க முகக் காப்பு அணிவதே போதுமானது என்று தாம் நினைத்திருந்ததாக அவர் சொன்னார்.

