குறைந்த வருவாய் ஊழியர்களுக்கு $700 வரை உதவி

குறைந்த வருவாய் ஊழியர்களுக்கு $700 வரை உதவி

2 mins read

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அண்­மைய கட்­டுப்­பா­டு­க­ளால் பொரு­ளி­யல் ரீதி­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள குறைந்த, நடுத்­தர வரு­வாய் பெறும் ஊழி­யர்­கள் ஒரு­முறை வழங்­கீ­டாக $700 வரை பெற உள்­ள­னர்.

புதிய தற்­கா­லிக மானி­யத் திட்­டத்­தின்­கீழ் இந்த உதவி அளிக்­கப்­படும்.

சுய-தொழில் செய்­யும் ஊழி­யர்­களும் இந்த உத­வித் திட்­டத்­திற்கு தகு­தி­பெ­று­வர்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட வர்த்­த­கங்­க­ளுக்­கான மேம்­பட்ட ஆத­ர­வுத் திட்­டங்­களை நேற்று அறி­வித்த நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங், இத­னைத் தெரி­வித்­தார்.

இம்­மா­தம் 16ஆம் தேதி­யி­லி­ருந்து ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை­யி­லான கால­கட்­டத்­தில் குறைந்­த­பட்­சம் ஒரு மாதத்­திற்கு சம்­ப­ள­மின்றி வேலை செய்­வோர் அல்­லது குறைந்­த­பட்­சம் ஒரு மாத வரு­வா­யில் 50 விழுக்­காடு அள­வுக்கு இழப்­பைச் சந்­தித்­தோர் புதிய கொவிட்-19 மீட்சி மானி­யத்­திற்கு (தற்­கா­லி­கம்) விண்­ணப்­பிக்­க­லாம்.

சம்ப­ள­மில்லா விடுப்­பில் வைக்­கப்­பட்­டுள்ள தகு­தி­பெ­றும் ஊழி­யர்­கள் இந்த மானியத் திட்டத்தின் கீழ் ஒரு­முறை வழங்­கீ­டாக $700 வரை பெறு­வர். அந்­தக் காலக்­கட்­டத்­தில், குறிப்­பிட்ட அளவு வரு­மான இழப்­பைச் சந்­திப்போர் $500 வரை­யி­லான ஒரு­முறை வழங்­கீட்­டைப் பெறு­வர்.

இதற்கு ஜூன் 3ஆம் தேதி­யி­லி­ருந்து ஜூலை 2ஆம் தேதி வரை விண்­ணப்­பிக்­க­லாம் என்று நிதி அமைச்சு தெரி­வித்துள்ளது.

உத­வித் தொகை குறித்த கூடு­தல் விவ­ரங்­களை, சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்சு வெளி­யி­டும்.

உணவு-பானத் துறை, சில்­லறை வர்த்­த­கம், விளை­யாட்டு, உட­லு­று­திக் கூடம் உள்­ளிட்ட துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

இந்தப் புதிய உதவி தற்­போ­துள்ள கொவிட்-19 மீட்சி மானியத் திட்டத்தின் (சிஆர்ஜி) ஒரு பிரிவு ஆகும். கிருமிப்­ ப­ர­வ­லால் பாதிக்­கப்­பட்ட குறைந்த, நடுத்­தர வரு­மா­னம் பெறும் ஊழி­யர்­கள், சுய­தொ­ழில் செய்­ப­வர்­க­ளுக்கு ஆத­ரவ­ளிக்­கும் வகை­யில் இந்த மீட்சி மானியத் திட்டம் இவ்வாண்டு ஜனவரி 18ல் தொடங்கப்பட்டது.

"கொவிட்-19 மீட்சி மானியத் தொகை­யைப் பெற சில விதி­

மு­றை­களும் தகுதி நிர்­ண­யங்­களும் உள்­ளன. அது மாற்­றப்­ப­டப் போவ­தில்லை.

"ஆனால், தற்­போ­தைய புதிய கட்­டுப்­பாட்டு சூழ­லுக்­கான வேறு­பட்ட விதி­மு­றை­க­ளு­டன் ஒரு தற்­கா­லிக உத­வித் திட்­டத்தை ஏற்­கெ­னவே உள்ள திட்­டத்­து­டன் இணைத்­துள்­ளோம்," என்­றார் அமைச்­சர்.

"எனவே இது தற்­கா­லி­க­மா­னது, இது இந்த குறிப்­பிட்ட காலத்­துக்­கா­னது. அதன்­பி­றகு வழக்­க­மான கொவிட்-19 மீட்சி உத­வி மானியம் தொட­ரப்­படும்," என்று திரு வோங் மேலும் கூறி­னார்.

கொவிட்-19 மீட்சி மானியத் திட்டம் மார்ச் மாதத்­தில் மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு மாதம் $700 வரை­யில் பெறும் வகையில் அவ்வாறு செய்யப்பட்டது.

மார்ச்­சில் 10,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு ஏறக்­கு­றைய $10 மில்­லி­யன் கொவிட்-19 மீட்சி மானியம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி அமைச்சு தெரி­வித்­தது.