மலேசியாவில் கிருமித் தொற்றுசம்பவங்கள் நாள்ேதாறும் அதிகரித்து வருகின்றன. வெள்ளிக் கிழமை அன்று மட்டும் 8,290 புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் மறுநாளான நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 9,020 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிரதமர் முகைதீன் யாசின் நாடு தழுவிய முழு முடக்கத்தை அறிவித்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் மலேசியா மீண்டும் முடக்கநிலைக்குத் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் மலேசிய வர்த்தக நிறுவனங்கள், முழு முடக்கம் பற்றி அதிக விவரங்களைக் கேட்டுள்ளன.
மலேசிய சிறிய, நடுத்தர நிறுவனங்களின் சங்கத் தலைவர் மைக்கல் காங், முடக்கக் காலகட்டத்தில் வர்த்தகங்கள் உயிர்பிழைப்பதற்கான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"எங்களுடைய ஆய்வுப்படி முழு முடக்கத்தால் 40 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் அரசாங்கம், நிறுவனங்கள் ஆகிய இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் தீர்வுகளை வழங்க வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் கடந்த ஐந்து நாட்களாகவே தொடர்ந்து தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 558,534க்குக் கூடி உள்ளது.
(சிங்கப்பூருக்கு பொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க மலேசியாவுடன் அணுக்கமாகச் செயல்படும் என்று சிங்கப்பூர் கூறியுள்ளது. பக்கம்: 2)

