கொவிட்-19 கிருமியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு களில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இருந்தாலும் இந்தியாவில் தற்போது நிலைமை சற்று மேம்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சிகளால் கடந்த சில நாட்களாக தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன. ஆனால் இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா என்பது தெரியவில்லை.
கடந்த ஆறு வாரங்களில் முதல் முறையாக நேற்று குறைவான எண்ணிக்கையில் 1.73 லட்சம் (173,000) புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் தொற்றுச்சம்பவங்கள் குறைந்துள்ளன.
கடந்த 45 நாட்களில் நேற்று சிறிய அளவில் பாதிப்பு அதிகரித்துள்ளதும் இதுவே முதல் முறை.
இதற்கு முன்பு ஏப்ரல் 12ஆம் தேதி அன்றுதான் ஆகக் குறைவான எண்ணிக்கையில் 1.61 லட்சம் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 3,617 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322,512ஐத் தொட்டுள்ளது. அதே சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 284,601 பேர் குண மடைந்துள்ளனர்.
இதுவரை 20.89 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,062,747 முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சென்ற 24 மணி நேரத்தில் ஆக அதிக எண்ணிக்கையில் தொற்றுச் சம்பவங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 31,079 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு அடுத்ததாக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஆனால் டெல்லியில் தொற்று குறைந்து வருகிறது.
இதற்கிடையே கிருமிப் பரவல் 2வது அலையில் நாடு முழுவதும் 550 மருத்துவர்கள் கொரோனாவுக்குப் பலியாகிவிட்டதாக நேற்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று சங்கம் கூறியது.
டெல்லி (104), பீஹார் (96), உத்தரப் பிரதேசம்(53) ஆகிய மாநிலங்களில் அதிக மருத்து வர்கள் கிருமித்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

