பி1617 எனும் உருமாறிய கொவிட்-19 கிருமி வகை உலகெங்கும் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் அதன் பாதிப்பு அதிகரிப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் சிவப்புக் கொடி காட்டிஉள்ளனர்.
இந்த நிலை நீடித்தால்
கிருமித்தொற்று நெருக்கடிநிலை தற்போதைய நிலையைவிட
இன்னும் மோசமான நிலையை எட்டக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கொவிட்-19 சூழலை அண்மையில் மறுஆய்வு செய்த மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 கிருமி
உருமாற்றம் தொடரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
"மக்களிடையே பி1617 கிருமி வகை மிக வேகமாகவும் பரவலாகவும் பரவக்கூடியது.
"இதன் விளைவாக பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணிகள் பெரும்பாலான நேரங்களில் சவால்மிக்கதாகி உள்ளன.
"இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. உலக மக்கள் இதற்கு முன் காணாத மிக மோசமான கிருமித்தொற்று நெருக்கடிநிலையை பி1617 கிருமி வகை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹொக் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் கூறினார்.
ஒருவரிடமிருந்து மற்றவர்
களுக்கு மிக எளிதில் பரவக்
கூடிய வகையில் பி1617 கிருமி உருமாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி தரும் பாதுகாப்பையும் மீறி இந்தக் கிருமி பலரை நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
பி1617 கிருமி வகை முதன்முதலாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில்
கண்டறியப்பட்டது.
தற்போது அது உலகெங்கும் பரவிவிட்டது.
கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன்பு சீனாவின் வூஹான் நகரில் தலைதூக்கிய கிருமியைவிட பி1617 கிருமி வகை ஒன்றரை
யிலிருந்து இரண்டு மடங்கு அதிகம் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்தக் கிருமி வகை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்பதாகவும் இந்தியாவில் ஆக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கிருமியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
"பி1617 கிருமி வகையின் கடுமை குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
"அதை உறுதி செய்ய முறையான ஆய்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி ஏற்பாட்டில் நடைபெற்ற இணையம்வழி கருத்தரங்கில் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்தியாவில் மேலும் அதிகமான இளையர்களுக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை டாக்டர் சௌமியா சுட்டினார்.
ஆனால் இது குறித்த
புள்ளிவிவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் இதுவரை 27 மில்லியன் பேர் கொவிட்-19
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோயின் காரணமாக அங்கு இதுவரை 325,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.

