பிரதமர் லீ: கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கைக்குத் திட்டமிடும் சிங்கப்பூர்

பிரதமர் லீ: கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கைக்குத் திட்டமிடும் சிங்கப்பூர்

1 mins read
21a9dab4-a94d-42ed-8e37-e5e1f16e004a
பிரதமரின் உரை 'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட, அதனைச் செவிமடுக்கும் பொதுமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமியுடன் மக்கள் தங்களது வழக்கமான அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக சிங்கப்பூர் புதிய இயல்புவாழ்க்கைக்குத் திட்டமிட்டு வருவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.

நாட்டு மக்களுக்கு இன்று (மே 31) தாம் ஆற்றிய உரையில், புதிய இயல்புநிலையில் கொரோனா கிருமி நமது வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொள்ளாது என்றும் மக்கள் வேலைக்குச் செல்லவும் நண்பர்களைச் சந்திக்கவும் இசைக் கச்சேரி போன்ற பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இறுதியாக, முகக்கவசமின்றி வெளிப்புறங்களுக்குச் சென்று வரவும் இயலும் என்றும் பிரதமர் லீ கூறினார்.

அத்தகைய மகிழ்ச்சியான நிலையிலிருந்து இப்போது நாம் சற்றே விலகியிருப்பினும் சரியான திசையை நோக்கிச் செல்கிறோம் என்று திரு லீ குறிப்பிட்டார்.

இறுதியில் ஒருநாள் உலகளவில் கொரோனா பரவல் தணிந்துவிடும் என்றாலும் அது முழுமையாக அழிக்கப்படமால் அது மனிதர்களுடன் தொடர்ந்து நீடித்திருக்கும் என்றும் அவர் சொன்னார்.

அதாவது, அவ்வப்போது சிறிய அளவில் கொரோனா தொற்று ஏற்படுவதை சிங்கப்பூர் எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்றார் அவர்.

"அவ்வப்போது சிலர் கிருமித் தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே நம் இலக்காக இருக்க வேண்டும்," என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நமது உத்திகளை நேர்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவர், குறிப்பாக பரிசோதனை, தொடர்புகளின் தடமறிதல், தடுப்பூசி போடுதல் ஆகிய மூன்று நடவடிக்கைகளை அதிகளவிலும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்