பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
கொவிட்-19 கிருமியுடன் மக்கள் தங்களது வழக்கமான அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக சிங்கப்பூர் புதிய இயல்புவாழ்க்கைக்குத் திட்டமிட்டு வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
நாட்டு மக்களுக்கு நேற்று தாம் ஆற்றிய உரையில், புதிய இயல்புநிலையின்போது கொரோனா கிருமி நமது வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்ளாது என்றும் மக்கள் வேலைக்குச் செல்லவும் நண்பர்களைச் சந்திக்கவும் இசைக் கச்சேரி போன்ற பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இறுதியாக, முகக்கவசமின்றி வெளிப்புறங்களுக்குச் சென்று வரவும் இயலும் என்றும் பிரதமர் லீ கூறினார்.
அத்தகைய மகிழ்ச்சியான நிலையிலிருந்து இப்போது நாம் சற்றே விலகியிருப்பினும் சரியான திசையை நோக்கிச் செல்கிறோம் என்று திரு லீ குறிப்பிட்டார்.
இறுதியில் ஒருநாள் உலகளவில் கொரோனா பரவல் தணிந்துவிடும் என்றாலும் அது முழுமையாக அழிக்கப்படாமல் மனிதர்களுடன் தொடர்ந்து நீடித்திருக்கும் என்று அவர் சொன்னார்.
அதாவது, அவ்வப்போது சிறிய அளவில் கொரோனா தொற்று ஏற்படுவதை சிங்கப்பூர் எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்றார் அவர்.
"அவ்வப்போது சிலர் கிருமித் தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்," என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நமது உத்திகளை நேர்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவர், குறிப்பாக பரிசோதனை, தொடர்புகளின் தடமறிதல், தடுப்பூசி போடுதல் ஆகிய மூன்று நடவடிக்கைகளை அதிகளவிலும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக விளக்கினார்.
ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை, எச்சில்/சளி மாதிரி பரிசோதனை, மூச்சுப் பகுப்பாய்வுச் சோதனை என இப்போது வெவ்வேறு கொவிட்-19 பரிசோதனைகள் இருப்பதைக் குறிப்பிட்ட திரு லீ, விரைவில் ஒருவர் தாமாகவே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் சுயபரிசோதனைக் கருவிகள் விற்பனைக்கு வரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வேகமாகவும் பரந்த அளவிலும் தொடர்புகளின் தடமறிந்து, நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை விரைந்து தனிமைப்படுத்தவும் முதல்முறை தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக தடுப்பூசித் திட்டத்தை முடுக்கிவிடவும் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
அதற்கேற்ப, மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இன்று தொடங்குகிறது. நடப்பு ஆண்டில் 'ஓ', என்', 'ஏ' நிலைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்பின் 39 மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையோருக்கான தடுப்பூசி நடவடிக்கை தொடங்கும்.
எஞ்சியுள்ள மூத்த குடிமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர்கள் முன்பதிவு செய்யத் தேவையின்றி, தடுப்பூசி மையத்திற்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தொடர்ந்து நீடித்திருக்கும் கொரோனா கிருமியுடன் வாழ்வது என்பது சிங்கப்பூர் தனது எல்லைகளை முழுவதுமாக மூடியிருக்கவில்லை என்பதைக் குறிப்பதாக திரு லீ சொன்னார்.
"உணவு, அத்தியாவசியப் பொருள்கள், ஊழியர்கள், வர்த்தக மற்றும் பிற பயணிகள் தொடர்ந்து வந்துபோய்க் கொண்டிருக்க வேண்டும். சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான செயல்திறன்மிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் எல்லைக் கட்டுப்பாடுகளுடனும் உலகத்துடன் நாம் தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம்," என்று அவர் கூறினார்.
அடுத்த மாதம் 13ஆம் தேதிக்குப் பிறகு சமூக ஒன்றுகூடல்கள் மீதான கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர் தளர்த்த முடிய வேண்டும் என்றார் திரு லீ.
கொவிட்-19 சூழல் மேம்பட்டு, சமூகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறையும் பட்சத்தில் அது சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் விழிப்புநிலையை அதிகப்படுத்தி, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதன் விளைவாக அன்றாடம் பதிவாகும் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
"இன்னொரு பெரிய கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகாமல் தடுத்து, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நாம் சரியான பாதையில் செல்ல வேண்டும்," என்றார் அவர்.
இன்னும் ஒரு வாரத்தில் அது உறுதியாகத் தெரிந்துவிடும் என்றும் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
கொரோனா கிருமி உலகைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்து வந்தாலும், அதிலிருந்து விடுபட்டு, எதிர்காலத்திற்காக வலுவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கே இப்போதைக்கு சிங்கப்பூர் முன்னுரிமை அளித்து வருவதாக திரு லீ குறிப்பிட்டார்.
ஒரே தேசமாக இணைந்து, கிருமித்தொற்றைக் கடந்து, இன்னும் வலுவான, நம்பிக்கைமிக்க நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கும் என்று பிரதமர் உறுதியுடன் கூறினார்.
பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்
♦ சமூகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையும் பட்சத்தில், ஜூன் 13க்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
♦ ஒருவர் தாமாகவே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்விதமாக, எளிதாகப் பயன்படுத்தக் கூடிய 'சுயபரிசோதனைக் கருவிகள்' விரைவில் மருந்தகங்களில் விற்பனைக்கு வரும்.
♦ வேலையிடம் அல்லது சமூகம் போன்ற இயல்பான சூழல்களில், நலமாக இருப்போரும் அவ்வப்போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
♦ கொரோனா தொற்றிய ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
♦ மாணவர்கள் இன்று முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.
60 வயதும் அதற்கும் மேற்பட்டோர், முன்பதிவு இன்றி நேரடியாக தடுப்பூசி மையத்திற்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
♦ சிங்கப்பூரர்கள் கொவிட்-19 கிருமியுடன் வாழத் தயாராக வேண்டும்.

