குழந்தைகளிடம் பரவும் கொவிட்-19 தொற்று; மலேசியா எச்சரிக்கை

2 mins read

கொவிட்-19 தொற்­றால் மர­ணம் நிகழ்­வ­தும் குழந்­தை­கள் மோச­மாக பாதிக்­கப்­ப­டு­வ­தும் அதி­க­ரித்து வரு­வது மலே­சிய சுகா­தார அதி­கா­ரி­க­ளி­டம் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­ இருக்கிறது.

மலே­சி­யா­வில் அன்­றா­டம் கிருமி தொற்­று­வோர் எண்­ணிக்­கை­யும் அத­னால் ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­களும் தொடர்ந்து ஏறு­மு­க­மாக இருந்­ததை அடுத்து, அங்கு இம்­மா­தம் 1ஆம் தேதி­யில் இருந்து 14ஆம் தேதி வரை முழு முடக்­க­நிலை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிப்­பும் இறப்­பும் கூடி­ய­தற்கு அதி­கம் பர­வக்­கூ­டிய உரு­மா­றிய கொரோனா கிரு­மி­கள் கார­ண­மாக இருக்­க­லாம் என்­றும் அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இவ்­வாண்­டின் முதல் ஐந்து மாதங்­களில், மலே­சி­யா­வில் ஐந்து வய­துக்­குட்­பட்ட மூன்று குழந்­தை­கள் கிரு­மித்­தொற்­றால் மாண்­டு­விட்­ட­னர். சென்ற ஆண்­டி­லும் இதே­போல் மூன்று குழந்­தை­கள் இறந்­து­போ­ன­தாக சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­தார்.

கடந்த ஜன­வரி-மே கால­கட்­டத்­தில், கிருமி தொற்­றி­யதை அடுத்து ஐந்து வய­துக்­குட்­பட்ட 19 குழந்­தை­கள் உட்­பட மொத்­தம் 27 குழந்­தை­க­ளுக்­குத் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் வைத்து மருத்­து­வம் பார்க்க வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாக டாக்­டர் ஹிஷாம் குறிப்­பிட்­டார்.

"குறைந்த நோய் எதிர்ப்­பாற்­றல் கொண்ட மழ­லை­க­ளை­யும் குழந்­தை­க­ளை­யும் கொரோனா தொற்­றில் இருந்து பாது­காக்க எல்­லாத் தரப்­பி­ன­ரும், குறிப்­பாக பெற்­றோ­ரும் காப்­பா­ளர்­களும் முக்­கி­யப் பங்­காற்று­கின்­ற­னர் என்று சுகா­தார அமைச்சு நம்­பு­கிறது," என்று டாக்­டர் ஹிஷாம் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு தொடக்­கத்­தில் இருந்து இவ்­வாண்டு மே 30ஆம் தேதி­வரை மொத்­தம் 82,341 குழந்­தை­கள் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தாக அண்­மை­யில் மலே­சிய சுகா­தார அமைச்­சர் ஆதம் பாபா தெரி­வித்­தி­ருந்­தார்.

அறுநூறாயிரத்தைக் கடந்த பாதிப்பு

இந்நிலையில், மலே­சி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 7,748 பேருக்­குத் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக நேற்­றுப் பிற்­ப­க­லில் அறி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 603,122ஆக உயர்ந்­தது.

ஆக அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்டு வரும் மாநி­ல­மாக சிலாங்­கூர் நீடிக்­கிறது. அங்கு மேலும் 2,612 பேரை கொரோனா தொற்­றி­விட்­டது. கோலா­லம்­பூர் (851), நெகிரி செம்­பி­லான் (709), சர­வாக் (706), ஜோகூர் (446) ஆகிய மாநி­லங்­கள் அடுத்த நிலை­களில் வந்­தன.

தடுப்பூசிக்கு எதிராகத் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

இதற்­கி­டையே, பொது­மக்­க­ளி­டம் பீதி ஏற்­ப­டுத்­தும் வகை­யில் தடுப்­பூசி குறித்து தவ­றான தக­வல் பரப்பு­வோர் மீது அவ­ச­ரச் சட்­டத்­தின்­கீழ் நட­வ­டிக்கை எடுப்­பது பற்றி மலே­சிய உள்­துறை அமைச்சு பரிசீலித்து வரு­கிறது.

"தடுப்­பூ­சிக்கு எதி­ரான குழு­வினர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மறுப்­பது அவர்­க­ளின் உரிமை. ஆனால், ஒட்­டு­மொத்த சமூ­க­மும் நோய் எதிர்ப்­பாற்­ற­லைப் பெற வேண்­டும் எனும் அர­சாங்­கத்­தின் முயற்­சிக்கு இடை­யூறு விளை­விக்­கும்­படி மக்­க­ளி­டம் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தும் விதமாக அவர்­கள் தவ­றான தக­வல்­க­ளைப் பரப்­பும் பட்­சத்­தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுதீன் தெரிவித்துள்ளார்.