ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் ஈடுபட்டதைத் தொடர்ந்து மியன்மாரில் நிலவும் நெருக்கடி நிலைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்றும் சமரசப் பேச்சுவார்த்தைக்கென சிறப்புத் தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர், இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர்கள் ஆசியான் நாடுகளை வலியுறுத்தி இருக்கின்றனர்.
மியன்மாரில் இடம்பெற்று வரும் வன்முறை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதும் எல்லாத் தரப்பினரும் பங்கு கொள்ளும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம் என்று அவர் கூறியிருக்கிறார்.
சீனாவின் சொங்சிங் நகரில் நேற்று தொடங்கிய சிறப்பு ஆசியான்-சீன வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பின் மெய்நிகர் முறையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது டாக்டர் விவியன் இவ்வாறு சொன்னார்.
மியன்மாரில் மிக மிக மெதுவாக காணப் படும் முன்னேற்றம் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
ஜகார்த்தாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி எட்டப்பட்ட ஐந்து அம்ச உடன்பாட்டை மியன்மார் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெத்னோ மர்சுடி வலியுறுத்தினார்.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் தென்சீனக் கடல் விவகாரம் தொடர்பிலும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் டாக்டர் விவியனும் தனியாகச் சந்தித்துப் பேசினர்.
"தென்கிழக்காசியாவில் பொருளியல், வர்த்தக மேம்பாடு குறித்துப் பேசினோம். குறிப்பாக, சீனா-சிங்கப்பூர் (சொங்சிங்) இணைப்புத் திட்டம் குறித்தும் அனைத்துலக நில-நீர்வழி வர்த்தகப் பாதை குறித்தும் விவாதித்தோம்," என்றார் டாக்டர் விவியன்.
ஆசியான் நாடுகளுடன் சீனாவின் உறவு வலுப்பட சிங்கப்பூர் முக்கியப் பங்காற்றி வருவதாக
திரு வாங் குறிப்பிட்டார்.