வெளிநாட்டு மலேசியர்களின் கடப்பிதழ் ஈராண்டு நீட்டிப்பு

வெளிநாட்டு மலேசியர்களின் கடப்பிதழ் ஈராண்டு நீட்டிப்பு

1 mins read

இவ்வாண்டு காலாவதியாகும் வெளிநாட்டு வாழ் மலேசியர்கள் தங்கள் கடப்பிதழை ஈராண்டுகள் நீட்டிக்க மனுச் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கொள்ளைநோய் தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் தங்கள் கடப்பிதழை புதுப்பிக்க ேவண்டி விடுக்கும் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் இங்குள்ள மலேசிய தூதரகம் தனது ஃபேஸ்புக் பதிவில் இவ்வாறு கூறியுள்ளது.

கடப்பிதழ் காலாவதியாகும் காலத்தை நீட்டிக்க விரும்புவோர் அதற்கென ஓர் ஆவணத்தை பூர்த்தி செய்து அதை தூதரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தங்கள் கடப்பிதழின் காலவரம்பை நீட்டிக்க தூதரகத்தில் குறிப்பிட்ட தேதியில் முன்னிலையாகுமாறு மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

இந்த நடைமுறை தற்போதும் நடப்பில் உள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இதை 'MyGOV' என்ற இணையப்பக்கம் வழியாகவும் செய்து முடிக்கலாம் என்று தூரகம் விளக்கம் அளித்துள்ளது.

எனினும், அதிகமானோர் மனுச் செய்துள்ளதால் காத்திருப்பு நேரம் எட்டிலிருந்து பன்னிரண்டு வாரங்கள் வரை ஆகலாம் என்று தூதரகம் கூறியது.

"இந்தக் கொள்ளைநோயால் பல நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால், பல மலேசியர்கள் தங்கள் பயணத் திட்டங்களை ஒத்திப்போட வேண்டியுள்ளது.

"இதனால் பலர் தங்கள் பயணத் திட்டங்களை ஒத்திப்போடுவதுடன் தங்களது கடப்பிதழ்களையும் நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது," என்று மலேசிய தூதரகம் மேலும் விளக்கம் அளித்தது.