தேசிய தடுப்பூசித் திட்டத்தின் அடுத்த கட்டமாக 12 வயதிலிருந்து 39 வயது வரையுள்ளோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த வயதுப் பிரிவினர் இன்று முதல் vaccine.gov.sg என்ற இணையத்தளத்தில் தடுப்பூசி போட பெயரைப் பதிவு செய்யலாம்.
தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரும் ஒருமுறை போட்டுக்கொள்ளும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறப்படுகிறது. இதனால் நோயெதிர்ப்பு திறன் மேலும் அதிகரிக்கும் என்பதற்கு சான்று உள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
முதல் இரு வாரங்கள் சிங்கப்பூரர்கள் பதிவு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நடைபெற்ற அமைச்சுகள் நிலை பணிக்குழுக் கூட்டத்தில் கூறினார்.
"இந்த வயதுகளில் ஏறக்குறைய 1.5 மில்லியன் பேர் உள்ளனர். இதுவே தடுப்பூசி போடப்பட வேண்டிய பெரிய வயதுப் பிரிவு," என்றார் அமைச்சர் ஓங்,
இவ்வாண்டு 12 வயதாகும் பிள்ளைகள் தடுப்பூசிக்குப் பதிய தங்கள் பிறந்தநாளை கடந்திருக்கவேண்டும்.
பதிவு செய்த பின்னர் குறுஞ்செய்தி மூலம் தடுப்பூசிக்கான நாள் குறித்து அறிவிக்கப்படும்.
சிறார்கள் அல்லது 18 வயதுக்குக் குறைந்தோர் தடுப்பூசிக்குப் பதிவு செய்ய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் தேவை. தடுப்பூசி நிலையத்துக்கு 12 வயதும் அதற்கும் குறைந்த வயதுடைவர்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் செல்ல வேண்டும். 13 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதும் உடையவர்களுக்கு இது கட்டாயமில்லை.
இதுவரையில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
மக்கள்தொகையில் 44 விழுக்காடு, அதாவது 2.2 மில்லியன் பேர் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்றார் அவர்.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் முக்கால்வாசிப் பேர், 45 முதல் 59 வயது வரையுள்ளோரில் 74%, 40 முதல் 44 வயது வரையுள்ளோர் 65% முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
மாணவர்களில் 85 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள் அல்லது தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர்.
"தற்போது அன்றாடம் ஏறக்குறைய 49,000 அளவு தடுப்பூசி போடப்படுகிறது. அன்றாட தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் ஆற்றல் சிங்கப்பூரிடம் உள்ளது. எனினும், தடுப்பூசிகள் சீராகவும் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

