அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் ஊழியர்கள் மூவருக்குத் தொற்று; பரிசோதனை தொடங்கியது

அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் ஊழியர்கள் மூவருக்குத் தொற்று; பரிசோதனை தொடங்கியது

2 mins read
13fadd81-aafe-4ac4-9ac5-35aa0d64eff5
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த இரு வாரங்களில் அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதிக்கு வந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதற்காக ஸ்காட்ஸ் சாலையில் ஒரு மருத்துவ மையத்திற்கு இன்று (ஜூன் 12) காலை வந்திருந்தனர்.

ஷா சென்டர் கடைத்தொகுதியில் உள்ள ராஃபிள்ஸ் மருத்துவ மையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்காகக் காலை 8.30 மணியில் இருந்தே அந்தக் கடைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்ததைக் காண முடிந்தது.

வரிசையில் நின்றிருந்த பலரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திட பரிசோதனை செய்துகொள்வதாகக் கூறினர்.

தங்களைச் சுற்றியுள்ளோரின் பாதுகாப்பிற்காகத் தாமும் தம் கணவரும் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார் திருமதி அபர்ணா, 71.

அயோன் ஆர்ச்சர்டில் உள்ள டெய்சோ கடைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தாங்கள் வந்திருந்ததாக திருமதி அபர்ணா கூறினார். தாங்கள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுவிட்டதால் பாதுகாப்பாக உணர்வதாகவும் அவர் சொன்னார்.

அந்தக் கடைத்தொகுதியில் உள்ள கார்டியன் மருந்தகத்தில் விற்பனை மேம்பாட்டாளராகப் பணிபுரியும் 57 வயதுப் பெண்ணை கொரோனா தொற்றியிருந்ததைச் சுகாதார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது. அவர், அந்தக் கடைத்தொகுதியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றாவது பணியாளர்.

இதைத் தொடர்ந்து, அந்தக் கடைத்தொகுதி மூடப்பட்டது. அங்கு பணிபுரிவோரும் வந்துசென்றோரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என அமைச்சு அறிவித்தது.

அங்குள்ள கடைகளின் பணியாளர்கள் அனைவரும் இன்று நண்பகல் 12 மணிக்குள் எச்சில்/சளி மாதிரிப் பரிசோதனை செய்துகொள்ள, ஓர் இணையப்பக்கம் வழியாக முன்பதிவு செய்துகொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கூட்டத்தைத் தவிர்க்க, தாங்கள் முன்பதிவு செய்துள்ள நேரத்திற்குச் சரியாக வரும்படியும் அயோன் நிர்வாகம் அவர்களுக்கு நினைவூட்டியது.

துப்புரவு செய்யவும் கிருமிநாசினி தெளிக்கவும் ஏதுவாக நான்கு நாள்களுக்கு, அதாவது வரும் புதன்கிழமை காலை 7 மணிவரை அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதி மூடப்பட்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்