கடந்த சில நாள்களாக சமூகத்தில் புதிதாக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் பதிவான நிலையில், நேற்று அது மீண்டும் இரட்டை இலக்கத்தை எட்டியது.
சமூகத்தில் 12 பேர் உட்பட மேலும் 21 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
சமூகத்தில் தொடர்புகளின் மூலம் எழுவரைக் கிருமி தொற்றியது. அவர்களில் இருவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்; ஐவர் கண்காணிப்பு நடவடிக்கைகளின்மூலம் கண்டறியப்பட்டனர்.
சமூகத்தில் தொற்று உறுதியான மற்ற ஐவரும் தொடர்பின்றி பாதிக்கப்பட்டதாக இப்போதைக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேரை கிருமி தொற்றிவிட்டது. சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அந்த ஒன்பது பேரும் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். இதை அடுத்து, ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 62,266 ஆனது.

