கொவிட்-19 போன்று இன்னொரு பெருந்தொற்று இவ்வுலகில் ஏற்படாமல் தடுக்க பணக்கார 'ஜி7' நாடுகளின் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்று வரும் ஜி7 உச்சநிலை மாநாடு பிரிட்டனின் கார்ன்வால் நகரில் உள்ள காபிஸ் பே உல்லாச விடுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
தடுப்பூசி உருவாக்கம், உரிமம் வழங்குதல், சிகிச்சை, எதிர்காலத்தில் தோன்றும் நோய்களை அறிதல் ஆகியவற்றுக்கான கால அவகாசத்தைக் குறைக்கவும் உலகளவில் கண்காணிப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் கூட்டு முயற்சிகள் எடுக்கப்படும்.
முன்னதாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க ஜி7 நாடுகள் இணங்கும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
மரபணு வரிசையை அடையாளம் காண்பதற்கான கொள்ளளவை அதிகரிக்கவும் உலக சுகாதார நிறுவனத்தை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தரவும் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க ஏதுவாக அவற்றுக்கான காப்புரிமைகளைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு அமெரிக்காவும் பிரான்சும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், ஜெர்மனி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல், அனைத்துலகப் பல்லுயிர்வளத்தைப் பாதுகாத்தல் ஆகியவை குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜி7 நாடுகளின் உச்சநிலை மாநாடு தொடர்பான இறுதிக் கூட்டறிக்கை இன்று வெளியிடப்படும்.
அதில், கொரோனா பரவல் ஏற்படுத்திய பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான கடப்பாடுகள் அடங்கிய பிரகடனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இன்னொருமுறை இப்படி எதிர்பாராத சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதை உறுதிசெய்ய முதன்முதலாக உலகின் முன்னணி ஜனநாயக நாடுகள் கைகோத்துள்ளன. அதாவது, கடந்த 18 மாத நிகழ்வுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்வதும் அடுத்த முறை மாறுபட்ட முறையில் பணியாற்றுவதும் அதிலடங்கும்," என்றார் திரு ஜான்சன்.
ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய வட்டாரங்களில் ஆதிக்கம் செலுத்த முயலும் சீனாவைத் தடுத்து நிறுத்தும் விதமாக, உள்கட்டமைப்பை உருவாக்க வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக உதவிகளை ஜி7 தலைவர்கள் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

